சென்னை, செப்டம்பர் 20 – ‘ஐ’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது இந்தியா முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது.
முன்னாள் தமிழக முதல்வரைச் சந்தித்துப் பேசிய கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட், அந்த நேரத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிகுந்த எளிமையுடன் நடந்து கொண்டார்.
அங்கு காவலுக்கு வந்த சென்னை காவல் துறை அதிகாரிகளுடன் ஜாலியாகத் தோளில் கைபோட்டுக் கொண்டு அளவளாவினார். அர்னால்ட் அளவுக்கு பிரபலமாக இருக்கும் ஒருவர் இந்த அளவுக்கு எளிமையாக காவல் துறையினருடன் பழக மாட்டார்கள்.
ஆனால், இப்படியெல்லாம் சென்னை வந்தது முதல் மகிழ்ச்சியாக இருந்த அர்னால்ட் ஐ படத்தின் இசை வெளியீட்டின் போது கோபமாகி விட்டாராம்.
இதனால் விழா நடந்து கொண்டிருக்கும் போதே மேடையில் ஏறி ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு அதிக நேரம் இருக்காமல் சென்றுவிட்டாராம் அர்னால்டு. இதற்கு மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி இரவு 8 மணிக்குத் தொடங்கியதுதான் காரணம் என்கிறார்கள்.
மேலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் பல குளறுபடிகள். பொறுமை இழந்த அர்னால்டு கோபத்துடன் கிளம்பியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
அதனால்தான், இசை வெளியீட்டு விழா மேடையில் படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தட்டு வெளியிடப்பட்டபோது, அர்னால்ட் அங்கில்லை என்கிறார்கள். அதற்கு முன்பாகவே, கிளம்பிப் போய்விட்டாராம்.