பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 – கடந்த ஜூலை 17-ம் தேதி, கிழக்கு உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமானப் பேரிடருக்குக் காரணமானவர்கள் குறித்த தகவல் அளித்தால் 30 மில்லியன் அமெரிக்க டாலர் (97 மில்லியன் ரிங்கிட்) சன்மானம் அளிப்பதாக பெயர் குறிப்பிடாத நிறுவனமோ அல்லது தனிநபரோ முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை ஜெர்மனைச் சேர்ந்த விஃப்கா என்ற புலனாய்வு நிறுவனம் ஒன்று தங்களது இணையத்தளத்தில் விளம்பரமாக வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார் என்று தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க நினைப்பவர்கள் யார், ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு என்ன ஆனது? மற்றும் என்ன மாதிரியான ஆயுதம் இதற்குப் பயன்படுத்தப்பட்டது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ள அந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகின்றது.