ஸ்ரீநகர், செப்டம்பர் 18 – காஷ்மீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. மக்கள் தங்களது வீடுகளுக்குள் தேங்கியுள்ள, சேறு சகதிகளை வெளியேற்றி வருகிறார்கள்.
போக்குவரத்துக்காக சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களை இணைக்கும் சாலைகளில், வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், ஸ்ரீநகரில் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இடிந்து விழக்கூடிய அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நசிர் என்பவர் கூறுகையில், “ தண்ணீரில் நீண்ட நாட்களாக கட்டிடங்கள் மூழ்கியுள்ளதால், அவை இடிந்து விழக்கூடும். ஏற்கனவே பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன. கடந்த 3 நாட்களாக, அதிகளவில் தண்ணீர் வெளியேறவில்லை.
எனவே தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, கட்டிடங்களை காப்பாற்ற முடியும்’’ என்றார். சிறிதும் பெரிதுமான 30 நீர் வெளியேற்றும் இயந்திரங்களை அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.