கோலாலம்பூர், செப்டம்பர் 18 – அண்மையில் தனது புதிய தொழில்நுட்ப கருவிகளை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம் புதிய ஐஓஎஸ் 8.0 (iOS 8.0) இயங்குதளத்தின் அறிமுகத்தையும் அறிவித்தது.
நேற்று அமெரிக்க நேரப்படி 17 செப்டம்பர் 2014 முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்த, இந்த இயங்கு தளத்தை தங்களின் ஐஓஎஸ் கருவிகளில் பயனர்கள் தற்போது பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே, ஐஓஎஸ் கருவிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் இயங்குதளங்கள், இதன்மூலம் புதுப்பிக்கப்பட்டு, புதிய ஐஓஎஸ் 8.0 இயங்குதளத்தின் புதிய தொழில் நுட்ப வசதிகளோடு இயங்கத் தொடங்கும்.
ஐஓஎஸ் 8.0-வின் கொள் அளவு 1 கிகா பைட் (1GB) ஆகும். உடனடியாக பயனர்கள் பதிவிறக்கங்களை நாடுவர் என்பதனால், கட்டம் கட்டமாக ஆப்பிள் இந்த புதிய இயங்குதளத்தின் பதிவிறக்கத்தை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆசிய நாடுகளில் இன்று காலை முதல் இயங்குதளத்தை பதிவிறக்கத்தின் மூலம் மேம்படுத்துவது தொடங்கியது.
புதிய 8.0 இயங்கு தளத்தின் சிறப்பம்சமாக கருதப்படுவது, மென்பொருள் மேம்பாட்டாளர்கள் தங்களின் சொந்த விசைப் பலகைகளை உருவாக்கி இயங்குதளத்தோடு சேர்க்கும் வசதியாகும்.
மென்பொருள் மேம்பாட்டாளர்கள் இனி தங்களின் சொந்த மொழிகளுக்கான விசைகளை உருவாக்க முடியும் என்பதுடன், தாங்களே வடிவமைத்த விசைகளையும் அதற்கே உரிய பயன்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்களையும் உள்ளீடு செய்ய முடியும்.
கூடுதல் மொழிகளின் பயன்பாட்டிற்கும் இதன் மூலம் வழிவகுக்கலாம்.
இன்று முதல் முரசு சிஸ்டம்சின் “சங்கம்” விசை உள்ளீடுகள்
இந்த அடிப்படையில் “சங்கம்” என்ற பெயரோடு புதிய ஐஓஎஸ் 8.0 இயங்குதளத்திற்கென புதிய விசைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக முரசு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய செயலியை பயனர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்படுத்தத் தொடங்கலாம்.
முரசு நிறுவனம் கணினி தொழில்நுட்பத் துறையில் முன்னணி வகிக்கும் ஒரு மலேசிய நிறுவனமாகும். நீண்ட காலமாக தமிழ் விசைகளையும், மற்ற இந்திய மற்றும் இந்தோசீன மொழிகளுக்கான விசைகளையும் இந்த நிறுவனம் உருவாக்கி வந்துள்ளது.
“சங்கம்” இந்நிறுவனத்தால் ஐஓஎஸ் செயல்பாட்டுக்கென முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்ட விசைகளாகும்.
“சங்கம்” குறித்து கருத்துரைத்த முரசு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிறுவனருமான முத்து நெடுமாறன் (படம்) “ஐஓஎஸ் 8.0 இயங்குதளம், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்படும் அதே நாளில் எங்களின் புதிய “சங்கம்” செயலியும் வெளியீடு காண்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றோம். இந்த முதல் பதிப்பில் நாங்கள் நான்கு தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றுக்கான விசைகளை உள்ளீடு செய்திருக்கின்றோம்” எனக் குறிப்பிட்டார்.
இந்த நான்கு மொழிகளுக்கான விசைகளிலும் உள்ள சிறப்பம்சங்களை பின்வருமாறு முத்து நெடுமாறன் விளக்கினார்:
- முதல் எழுத்தை தேர்வு செய்து உள்ளிடும் போது (type) அந்த எழுத்தைக் கொண்டு தொடங்கும் உத்தேச அடுத்த சொற்களை தானே தேர்ந்தெடுத்துக் கொடுப்பது;
- சொல் தவறுதலாக இருந்தால் உடனடியாக உத்தேச திருத்தங்களுக்கான பரிந்துரைகள்
- ஒரு சொல்லை உள்ளீடு செய்ததும் அதற்கேற்ற அடுத்த சொல்லை பரிந்துரைப்புது
இன்று முதல் “சங்கம்” பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயலிகளுக்கான தளமான எப் ஸ்டோரில் (App Store) இருந்து “சங்கம்” செயலியை இன்று முதல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
“சங்கம்” குறித்து மேலும் விவரித்த முத்து நெடுமாறன் “எங்களின் இந்த முதல் பதிப்பை ஐபோன்களுக்கும் ஐபோட்களுக்கும் (iPod) மட்டும் என தற்போது கட்டுப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் பயனர்கள் பயன்படுத்தும்போது எழக்கூடிய அவர்களின் கருத்துக்களை உடனடியாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப மேம்பாடுகளைச் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் பலர் முதன்முறையாக இந்த மொழிகளை இணைய அஞ்சல்கள், குறுஞ் செய்திகள், வாட்செப் குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், டுவிட்டர், முகநூல் போன்ற செயலிகளில் உள்ளீடு செய்து பயன்படுத்துவர் என்பதால், அவர்களின் பயன்பாடுகள் குறித்த உடனடி கருத்துக்களை தெரிந்து கொள்ள நாங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றோம்” என்று கூறினார்.
கீழ்க்காணும் இணைப்பின் மூலம் சங்கம் செயலியை விசைகளின் உள்ளீடுகளை எப் ஸ்டோரில் இருந்து பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:
https://itunes.apple.com/us/app/sangam-keyboards/id910182628?ls=1&mt=8
சங்கம் செயலியின் அடுத்த கட்ட பதிப்பு ஐபேட் கருவிகளிலும் இயங்கும் வசதிகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் சுமார் 12 இந்திய மற்றும் இந்தோசீன மொழிகளுக்கான விசை உள்ளீடுகளை முரசு நிறுவனம் வடிவமைத்துத் தயாரித்துள்ளது என்பதுடன் இவை உலகின் பல முன்னணி திறன்பேசிகளிலும், தொலைத் தொடர்பு கருவிகளிலும் உள்ளிடப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.