Home கலை உலகம் சைமா விருது விழாவில் சிரஞ்சீவிக்கு சுற்றுலாத் துறை சிறப்பு விருது!

சைமா விருது விழாவில் சிரஞ்சீவிக்கு சுற்றுலாத் துறை சிறப்பு விருது!

658
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 19 – கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரபல தெலுங்கு மெகா ஸ்டாரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவிக்கு மலேசியா-இந்தியா இடையிலான சுற்றுலா மேம்பாட்டுக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Chiranjeevi SIIMA 2014

சைமா விருது விழாவில் சிரஞ்சீவி…

#TamilSchoolmychoice

சிறந்த படங்கள், சிறந்த சினிமா நட்சத்திரங்கள் என வழங்கப்பட்ட விருதுகளுக்கு மத்தியில் இந்த விருது வித்தியாசமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது.

அந்த விருதை மலேசிய கூட்டரசுப் பிரதேச அமைச்சரும், முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் (படம்) வழங்கினார். மலேசிய சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Tengku Adnan Tengku Mansorசைமா விருது விழா, மலேசிய சுற்றுலாத்துறையின் ஆதரவோடு நடத்தப்பட்டது என்பதோடு இந்த நிகழ்வுக்காக இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபல திரை நட்சத்திரங்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், தகவல் ஊடகவியலாளர்களுமாக கலந்து கொண்டிருந்தனர்.

சிரஞ்சீவி கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி – நடிகர் தொடங்கி அமைச்சர் வரை

தெலுங்குப் படவுலகின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கி, பின்னர் மெகா ஸ்டார் என்ற அந்தஸ்தோடு, இலட்சக்கணக்கான இரசிகர்களின் ஆதரவோடு உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் சிரஞ்சீவி.

திரைப்படங்களில் அவர் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் அவரது வாழ்நாள் சாதனையாக இந்தியாவில் கருதப்படுவது அவரது இரத்த தான பிரச்சாரம்தான்.

இரத்த தானம் வழங்குவதற்காக பல பிரச்சாரங்களை மேற்கொண்ட அவர், இரத்த தானம் வழங்கும் தனது இரசிகர்கள்  தன்னோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற வாய்ப்பை வழங்க முன்வந்தார். அதன் காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் இரத்த தானம் வழங்கி விட்டு, அந்த சான்றிதழோடு வந்து அவருன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Chiranjeevi political posterஒரு கட்டத்தில் தனது புகழைக் கொண்டு அரசியலிலும் சாதிக்கலாம் என்ற எண்ணத்தில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டார் சிரஞ்சீவி. ஆனால் அதனால் ஏற்பட்ட கசப்புகள், ஆந்திர அரசியலில் நிகழ்ந்த குழப்பங்கள், தெலுங்கானா பிரிவினை, போன்ற பல பிரச்சனைகளால் அலைக்கழிக்கப்பட்ட அவர் தனது கட்சியை கலைத்து விட்டு ஆதரவாளர்களோடு காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி, தனது அரசியல் பயணத்தை முடுக்கி விட்டார்.

அந்த சமயத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பதவிதான் மத்திய அரசாங்கத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர். அவர் சிறப்பாகவே செயல்பட்டாலும், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அவரது அரசியல் எதிர்காலமும் தற்போது கேள்விக் குறியாகி நிற்கின்றது.

இதற்கிடையில் கடந்த 7 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வரும் சிரஞ்சீவி தனது அடுத்த படத்தை விரைவில் ஆரம்பித்து நடிப்பார் என்ற தகவல்களும் சைமா விருது விழா மேடையிலேயே நிறைய பேசப்பட்டன.

இதுவரை 149 படங்களில் நடித்து முடித்து விட்ட சிரஞ்சீவி அடுத்து நடித்தால் அது அவரது 150வது படமாக இருக்கும்.

ஆரம்ப காலங்களில் ஒரு சாதாரண நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய சிரஞ்சீவி தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கின்றார்.

கே.பாலசந்தர் சிவசங்கரியின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கிய “47 நாட்கள்” திரைப்படத்தில் வில்லத்தனமான கணவனாக வந்து அசத்தல் நடிப்பை வழங்கினார்.

ரஜினிக்கு நெருக்கமான நண்பரான அவர், அந்த நட்பின் அடிப்படையில் “மாப்பிள்ளை” படத்தில், ரஜினியின் திருமணத்தை நிறுத்த வரும் வில்லன்களோடு மோதும் சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

சிரஞ்சீவியின் ஏற்புரை

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கான சிறப்பு விருதைப் பெற்றுக் கொண்ட சிரஞ்சீவி, தனது ஏற்புரையில் இந்தியாவின் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தபோது, மலேசியாவின் சுற்றுலாத் துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், பல தெலுங்குப் படங்களும், மற்ற படங்களும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட தான் ஊக்கம் வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

சரளமான ஆங்கிலத்தில் நீண்ட உரையை ஆற்றிய அவர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த தான் மேற்கொண்ட முயற்சிகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தியாவும் மலேசியாவும் இணைந்து சுற்றுலாத் திட்டங்களை வகுப்பதன் மூலம் எதிர்காலத்தில் “இன்கிரடிபிள் இந்தியா” (Incredible India) என சுற்றுலாத் துறையில் புகழ்பெற்றுள்ள தனது நாடும், “மலேசியா ட்ரூலி ஆசியா” (Malaysia Truly Asia) என சுற்றுலாத் துறையில் பெயர் பெற்றுள்ள மலேசியாவும் நிறைய பலன்களை ஒருங்கிணைந்து பெற முடியும் என்றும் சிரஞ்சீவி கூறினார்.

சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை சைமா விருது விழா மலேசியாவுக்கு பல சாதகமான பலன்களைத் தந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

-இரா.முத்தரசன்