கோலாலம்பூர், செப்டம்பர் 18 – கியூ.எஸ் (QS) என்ற அமைப்பு வெளியிடும் அனைத்துலக பல்கலைக் கழங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியாவைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
“உலகின் தலைசிறந்த 400 பல்கலைக் கழங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 மலேசிய பல்கலைக்கழங்களும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளதற்குப்
பாராட்டுகள். இதைவிட நம்மால் அதிகம் சாதிக்க முடியும்,” என தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு 167ஆவது இடத்தில் இருந்த மலாயா பல்கலைக்கழகம் இம்முறை 151-வது
இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் 269ஆவது இடத்தில் இருந்து 259ஆம் இடத்திற்கும், மலேசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகம் (யூனிவர்சிடி டெக்னோலஜி) 355ஆவது இடத்தில் இருந்து 294ஆவது இடத்திற்கும் முன்னேறி உள்ளன.
இதேபோல் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் 355ஆவது இடத்தில் இருந்து 309ஆவது
இடத்திற்கும், யூனிவர்சிடி பெர்தானியான் மலேசியா, 400ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.
மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் கடந்த ஆண்டைப் போலவே 501 முதல் 550ஆம்
இடத்திற்குள்ளான பிரிவில் இடம்பெற்றுள்ளது.