ஸ்கூடாய் : ஜோகூர் மாநிலத்திலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி கஸ்தூரி இராமலிங்கம் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 18) யுடிஎம் என்னும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (University Technology Malaysia) 67வது பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்றார்.
நேற்று தொடங்கிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் முதல் நாளில் பல்வேறு துறைகளில் பிஎச்டி (PhD) என்னும் முனைவர் (டாக்டர்) பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக வேந்தரும், ஜோகூர் சுல்தானின் துணைவியாருமான மாட்சிமை தங்கிய ராஜா சாரித் சோஃபியா இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி பட்டம் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை நேரில் வழங்கினார்.
நீண்ட காலமாக கல்வி அமைச்சில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் கஸ்தூரி இராமலிங்கம், பல்வேறு பன்னாட்டு மாநாடுகளில் பங்கு கொண்டு உரைகளை வழங்கி இருக்கிறார். தமிழ் மொழிக் கல்வி தொடர்பான பலதரப்பட்ட ஆக்கபூர்வ பணிகளிலும் ஆய்வுகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கஸ்தூரி இராமலிங்கம் கல்வி உளவியல் துறையில் (Educational Psychology) ஆய்வு மேற்கொண்டு பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். தனது ஆய்வை சிறப்பாக முடித்து முனைவர் பட்டம் பெற்றதோடு மட்டுமின்றி முனைவர் பட்டத்திற்கு தேர்வானவர்களுக்கான “வேந்தர் விருது” (Chancellor award) சிறப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பட்டம் பெற்ற மற்றவர்களின் சார்பில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் கௌரவத்தையும் அவர் பெற்றார்.
ஓர் ஆய்வை மேற்கொண்டு பிஎச்டி பட்டம் பெறுவது என்பது ஒருவருக்கு எவ்வளவு கடினமானது என்பதை இப்போது தான் உணர்ந்துள்ளதாக கஸ்தூரி தனது உரையில் தெரிவித்தார். விடாமுயற்சி, விரிவான ஆய்வுப் பணிகள், கடும் உழைப்பு ஆகியவை இந்தத் துறையில் தான் முனைவர் பட்டம் பெறுவதற்கான முக்கிய காரணங்கள் என அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் முனைவர் பட்டத்தை நிறைவு செய்தவுடன் எங்களைப் போன்ற மாணவர்களுக்கு மன வலிமை அதிகரித்துள்ளதோடு, எங்களின் அறிவாற்றலும் மேலும் கூர்மையும் ஆழமும் பெற்றுள்ளதாக அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.
தானும் தனது சக மாணவ, மாணவியரும் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று இன்று பட்டங்களை பெறுவதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் உதவியும் புரிந்த மலேசிய தொழில்நுட்பக் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அதன் விரிவுரையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் கஸ்தூரி தன் சார்பிலும் மற்ற மாணவர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத் தரப்பினர் தாங்கள் பட்டப்படிப்பை முடிக்கும் இறுதிக்கட்டம் வரை தங்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்தார்கள் என்பதை கஸ்தூரி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
அதே வேளையில் தன் சொந்த வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கல்வியில் தான் முன்னேற்றம் காண, எல்லா வகையிலும் உதவி புரிந்த தனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர்கள் தனது மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
முனைவர் பட்டம் பெறுவதற்காக தனக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் வழங்கியவர்களில் திரு முத்து நெடுமாறனை அவர் சிறப்பாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டார். முத்து நெடுமாறனுடன் இணைந்து “கனியும் மணியும்” எனும் செயலி உருவாக்கத் திட்டத்தில் தான் பணிபுரிந்தது தனது முனைவர் பட்ட முயற்சிகளுக்கு வித்திட்டது என கஸ்தூரி குறிப்பிட்டார்.
தமிழை முறையாகவும் சரளமாகவும் பேச இயலாத சூழ்நிலையில் இருந்து வரும் குழந்தைகளுக்கு, குறிப்பாக வீட்டில் தமிழ் மொழியில் உரையாடாத குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, “கனியும் மணியும்” செயலியின் துணையோடு தமிழில் சரளமாக உரையாடும் திறன்களை வளர்ப்பது தொடர்பான பல்வேறு கூறுகளைக் கொண்டதே கஸ்தூரியின் முனைவர் பட்ட ஆய்வாகும்.
கஸ்தூரியின் இந்த ஆய்வுக்கு வழிகாட்டும் விரிவுரையாளராக பேராசிரியர் டாக்டர் இயோ கீ ஜியார் (Professor Dr Yeo Kee Jiar) செயல்பட்டார். அவரின் பங்களிப்பிற்கும், ஒத்துழைப்புக்கும் கஸ்தூரி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.