Home நாடு மஇகா சட்டத் திருத்தம் : துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இனி 500 கிளைத் தலைவர்களின்...

மஇகா சட்டத் திருத்தம் : துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இனி 500 கிளைத் தலைவர்களின் ஆதரவு தேவை

419
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று சனிக்கிழமை நவம்பர் 18-ஆம் தேதி செர்டாங் மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மஇகாவின் 77 வது தேசிய பொதுப் பேரவையில் சில சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டு பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அந்த சட்ட திருத்தங்களை மஇகா தலைமைச் செயலாளரும் வழக்கறிஞருமான டத்தோ ஆர்.தி.ராஜசேகரன் சமர்ப்பித்து பேராளர்களுக்கு விளக்கம் அளித்தார். நேற்றைய மாநாட்டின் விவாதங்களுக்கு தலைமையேற்று நடத்திய தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் பேராளர்களுக்கு சட்டத் திருத்தங்கள் குறித்து விளக்கம் தந்தார். தொடர்ந்து பேராளர்களின் கருத்துகளும் விவாதங்களும் இடம் பெற்றன.

இந்த சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சம் தேசியத் தலைவருக்கு நிகராக தேசியத் துணைத் தலைவரின் பதவிக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாகும். இதுவரையில் தேசியத் தலைவருக்கு போட்டியிடும் ஒருவருக்கு 250 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனுவிலும் ஒருவர் முன்மொழிந்து இன்னொருவர் வழிமொழிந்து இருக்க வேண்டும். அந்த இருவரும் கிளைத் தலைவர்களாக இருப்பது அவசியம். ஆக, 500 கிளைத் தலைவர்கள் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவரை ஆதரிக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

ஆனால் தேசிய துணைத்தலைவர் என்று வரும்போது 100 வேட்புமனுக்கள் மட்டுமே போதுமானது என நடப்பு மஇகா சட்டவிதிகள் குறிப்பிடுகின்றன. இந்த சட்டவிதி நேற்றைய மாநாட்டில் திருத்தம் செய்யப்பட்டது. இந்தப் புதிய சட்ட திருத்தத்தின்படி தற்போது துணைத்தலைவருக்குப் போட்டியிடும் வேட்பாளரும் 250 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வேட்புமனுவில் ஒரு கிளைத் தலைவர் முன்மொழிய இன்னொரு கிளைத் தலைவர் வழி மொழிய வேண்டும்.

ஆக, துணைத்தலைவராக போட்டியிட விரும்பும் வேட்பாளர் குறைந்தபட்சம் 500 கிளை தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும். அது மட்டும் இன்றி துணைத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸின் தொடர்ச்சியான உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் அந்த வேட்பாளர் ஒரு கிளை காங்கிரஸ் தலைவராகவும், குறைந்தது மூன்று தவணைகள் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவராகவும் அல்லது 3 தவணைகளுக்கு மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்தவராகவும் அல்லது மூன்று தவணைகளுக்கு மத்திய செயலவை உறுப்பினராக இருந்தவராகவும் அல்லது தற்போதைய நடப்பு துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும்.

இந்த சட்ட திருத்தங்கள் மூலம் இனி மஇகாவில் தேசியத் தலைவர் – தேசியத் துணைத் தலைவர் இரு பதவிகளுக்குமான போட்டிகளுக்கான வேட்பு மனுக்கள்  சரிசமமான அளவில் இருக்கும்.

மஇகா கிளை ஆண்டுக் கூட்டத்திற்கு மஇகா தலைமையகத்தின் பிரதிநிதி

நேற்றைய பொதுப் பேரவையில் கொண்டு வரப்பட்ட இன்னொரு சட்டத்திருத்தம், ஒவ்வொரு கிளை ஆண்டுக் கூட்டத்திலும் போதுமான நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்வதை உறுதிப்படுத்துகிறது.

அதன்படி இனி ஒவ்வொரு கிளை ஆண்டுக் கூட்டத்திலும் மஇகா தலைமையகப் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு கூட்டம் நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை (கோரம்) இருப்பதை உறுதிப்படுத்துவார். அதன் பின்னரே கிளை ஆண்டுக் கூட்டம் நடைபெறும்.

இந்த சட்ட திருத்தங்களை பேராளர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அடுத்த 2024 ஆம் ஆண்டு மஇகாவுக்கு தேர்தல் ஆண்டாகும். அந்த கட்சித் தேர்தல்களின்போது இந்த புதிய சட்ட திருத்தங்கள், சங்க பதிவு இலாகாவின் அங்கீகாரத்திற்கு பின்னர் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.