செர்டாங் : மஇகாவின் 77-வது தேசிய பொதுப் பேரவை இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 18) செர்டாங்கில் உள்ள மேப்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர்வதா? இல்லையா? கேள்விக்குறியோடு இந்த ஆண்டுக்கான பொதுப் பேரவை பேராளர்களின் விவாதங்களோடும், தலைவர்களின் கருத்துகளோடும் நிறைவடைந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் தேசியத் தலைவரின் கொள்கை உரையோடு, வழக்கமான ஆண்டறிக்கை, கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வழக்கமாக மாநாட்டை திறந்து வைக்க வருகை தரும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஶ்ரீ சாஹிட் ஹாமிடி இந்த முறை பொதுப் பேரவைக்கு வரவில்லை. மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளும் தலைவர்களும் கூட இன்றைய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
தேசியத் தலைவரின் சகோதரர் மறைவால்…
தேசியத் தலைவர் விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரனின் மறைவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமையும், இன்று சனிக்கிழமையும், கருமக்கிரியை சடங்குகள் என்பதாலும் – அதன் காரணமாக தேசியத் தலைவர் பொதுப் பேரவையில் முழு நேரம் இருக்க முடியாது என்பதாலும் – மாநாட்டை ஒத்தி வைக்கும்படி மத்திய செயலவை கேட்டுக் கொண்டதாக துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மாநாட்டில் தெரிவித்தார்.
எனினும் தேசியத் தலைவரோ, தன் சொந்த குடும்ப சோகத்தைக் காரணம் காட்டி கட்சி மாநாட்டை ஒத்தி வைக்க கூடாது என உறுதியோடு மறுத்து விட்டதாகவும் அதன் காரணமாகவே இன்றைய மாநாடு நடைபெறுகிறது என்றும் சரவணன் மேலும் தெரிவித்தார்.
மாநாட்டுக்கு வருகை தந்து கொள்கை உரையாற்றிய விக்னேஸ்வரன் இரவெல்லாம் கண்விழித்து கருமக்கிரியை சடங்குகளில் கலந்து கொண்டிருந்தாலும், தனது கொள்கை உரையை நிகழ்த்த வந்திருப்பதாகக் கூறினார்.
கொள்கை உரைக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விக்னேஸ்வரன் அரசியல் விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, மாநாட்டை தொடர்ந்து சரவணன் நடத்துவார் என தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து இடம் பெறுவதா?
அதன் பின்னர் நடைபெற்ற மாநாட்டின் பேராளர்களின் விவாதங்களில் முக்கியமாக குறிப்பிடப்பட்ட அரசியல் அம்சம் ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா தொடர வேண்டுமா? இல்லையா? என்பதுதான். வாதத்தில் கலந்து கொண்ட பேராளர் ஒருவர் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை ஆதரிப்பதா என்ற முடிவை கட்சி உறுதியோடு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பேராளர்களின் வாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தொகுப்புரையாற்றிய ஆற்றிய சரவணன் கட்சிக்கு பதவிகள் தராவிட்டாலும் பரவாயில்லை – மரியாதை இல்லாத இடத்தில் நாம் தொடர்ந்து இருப்பதா இல்லையா – என்பதை முடிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் சமயத்தில் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், தனதுரையில் எனக்கு இன்னும் ஓராண்டு கால அவகாசம் தாருங்கள் – அதற்குள் நான் செய்ய வேண்டியதை செய்து காட்டுவேன் என உறுதிமொழி வழங்கினார்.
அந்த ஓராண்டு கால அவகாசம் அன்வார் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தொடங்குகின்றதா அல்லது அவர் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்த தேதியிலிருந்து அந்த ஓராண்டு கால அவகாசம் தொடங்குகிறதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என சரவணன் மேலும் குறிப்பிட்டார்.
விக்னேஸ்வரனும் நானும் பிரதமரை சந்தித்தபோது கூட பிரதமர், விக்னேஸ்வரனைப் பார்த்து உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேளுங்கள் என கூறினார். அப்போது விக்னேஸ்வரன் “எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் முக்கியப் பதவிகள் பலவற்றையும் வகித்து விட்டேன். அமைச்சுப் பொறுப்புகள் தருவதாக இருந்தால் அதனை சரவணனுக்கு வழங்குங்கள்” என்று என் முன்னாலேயே நேரடியாக கூறினார்.
“தேசிய முன்னணியின் வழியாக ஒற்றுமை அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றோம் எனினும் எங்களுக்கு உரிய மரியாதை தரப்படவில்லை” என சரவணன் வருத்தத்துடன் மாநாட்டில் குறிப்பிட்டார்.
“பதவிகள் தராத கூட்டணியில் கூட இருந்து விடலாம் ஆனால் மரியாதை கிடைக்காத கூட்டணியில் தொடர்ந்து இருப்பது சிரமம். அந்த முடிவை கட்சி வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறோம்” என அவர் தொடர்ந்து கூறினார்.
உதாரணமாக மாவட்ட, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நியமனம் என்று வரும்போது – பினாங்கு மாநிலத்தில் மாநில அரசாங்கத்தை கேட்டால் – நாங்கள் தேசிய முன்னணிக்கு இடங்களை ஒதுக்கி விட்டோம் என்று கூறுகிறார்கள். அதே வேளையில் தேசிய முன்னணியை கேட்டால் இது எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனை எப்படி நாங்கள் பிரித்துக் கொடுப்பது என தட்டிக் கழிக்கிறார்கள் இதுபோன்று நமது கட்சிக்கு மரியாதை தராத சூழலில் நாம் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவை கண்மூடித்தனமாக தர வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டிய நிலையில் கட்சி இருப்பதாக பேராளர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சரவணன் கூறினார்.