சென்னை : தமிழ் நாட்டு நடிகர்களில் இலக்கிய ஆர்வம் கொண்டவர் கமல்ஹாசன். பல முன்னணி எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் அவருருடன் தினமும் தொடர்பில் இருக்கும் நண்பர்கள்.
தான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்கூட வாரம்தோறும் தமிழ் நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டவர். அந்த வகையில் கடந்த வாரம் அவர் அறிமுகப்படுத்திய நூல் கு.அழகிரிசாமியின் சிறுகதைகள்.
மலேசியாவில் ‘தமிழ் நேசன்’ நாளிதழாக வலம் வந்த காலத்தில், சிறிது காலம் அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் கு.அழகிரிசாமி.
கமல்ஹாசன் மறைந்த எழுத்தாளர் தி.ஜானகிராமனின் தீவிர இரசிகர் என்பதும் பலரும் அறிந்ததுதான். ஒருமுறை ‘மரப்பசு’ என்னும் ஜானகிராமன் நாவலை வாசித்ததைப் பற்றி எழுதியிருந்தார். இன்று தி.ஜானகிராமனின் நினைவுநாள். அதனை நினைவு கூர்ந்து கமல் பின்வருமாறு தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்:
“இலக்கியம் என்பது எல்லோருக்கும் புரியாது என்கிற எண்ணமே எழாமல் எளிமையின் எல்லைக்கே சென்று எழுதியவர் தி.ஜானகிராமன். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள், உயிர்த்தேன் என நாவல்களாகட்டும், மனதின் அடியாழத்தில் பதிந்துவிடும் நடையழகோடு கூடிய சிறுகதைகளாகட்டும் தனது என்கிற முத்திரையைத் தவறாமல் பதித்த மூத்த தலைமுறை எழுத்தாளரான தி.ஜானகிராமனின் நினைவுநாள் இன்று. இந்த நிமிடமும் கால மாற்றத்தால் மதிப்பு மாறிவிடாத அவரது உலகளாவிய படைப்புகளை வாசிப்பதே நாம் அவரை நினைவுகூரும் நல்ல வழி”