சுதந்திரம் பெற்றது முதல் பின்பற்றப்படும் நடைமுறையின்படியே சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் கூறியுள்ள தகவல் சரியல்ல என்றும் அரண்மனைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது தனிச்செயலர் டத்தோ முனிர் பானி மூலம் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார் சிலாங்கூர் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா.
“சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி (பாரிசான்) நிர்வகித்தபோது, அக்கூட்டணியின் தலைவர் என்ற முறையில் மந்திரி பெசார் பதவிக்கு நாட்டின் பிரதமர் பலரது பெயர்களை பரிந்துரைப்பார். அதிலிருந்து தகுதியான ஒருவர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதே வழக்கமாக இருந்தது,” என அந்த அறிக்கையில் டத்தோ முனிர் பானி தெரிவித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு சிலாங்கூரை எதிர்க்கட்சிகள் கைப்பற்றிய பிறகு, மந்திரி பெசார் பதவிக்கு இருவரது பெயர்களைப் பரிந்துரைக்குமாறு அக்கட்சிகளை அரண்மனை கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
வெற்றி பெற்ற பிறகு, மந்திரி பெசார் பதவிக்கு 4 பெயர்களை பரிந்துரைக்கும்படி 3 கட்சிகளுக்கும் கடிதம் அனுப்புமாறு சுல்தான் எனக்கு உத்தரவிட்டார்,” என முனிர் பானி தெரிவித்துள்ளார்.
“எனினும் இரண்டாவது முறையாக காலிட் பெயரே 3 கட்சிகளாலும் முன்மொழியப்பட்டது. அரண்மனை வட்டாரத்துடன் அவர் இணக்கமான நல்லுறவைக் கொண்டிருந்ததால், அவரை மீண்டும் அப்பதவியில் நியமிக்க சுல்தான் ஒப்புக் கொண்டார். இத்கைய தகவல்களை அரண்மனைத் தரப்பு வெளியிடுவது வழக்கமல்ல என்றாலும், தற்போது நிலவி வரும் குழப்பத்தைப் போக்கி, சகஜ நிலையை ஏற்படுத்த இத்தகவல்களை வெளியிடுவது அவசியமாகிறது,” என முனிர் பானி தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் வெளியிடுவது சரியான தகவல்தான் என்பதை அன்வார் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“மக்களை குழப்பக்கூடிய அல்லது சுல்தான் குறித்த தவறான தோற்றத்தை
ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடக் கூடாது என அன்வாருக்கு
அறிவுறுத்துகிறோம்,” என்று முனிர் பானி மேலும் கூறியுள்ளார்.