பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 19 – சுதந்திரம் பெற்றது முதல் பின்பற்றப்படும் நடைமுறையின்படியே சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு ஒரே ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டது என தாம் கூறியதில் தவறு இருப்பின் அதற்காக சிலாங்கூர் சுல்தானிடம் மன்னிப்பு கோருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
அம்னோ மற்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த போது தாம் அறிந்து கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே மந்திரி பெசார் நியமனம் குறித்து கருத்து வெளியிட்டதாக அவர் தெரிவித்தார். “நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்குமாயின் சுல்தானிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் அன்வார்.
முன்னதாக அன்வார் கூறிய கருத்துக்கு சிலாங்கூர் சுல்தான் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது தனிச்செயலர் டத்தோ முனிர் பானி மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுதீன் இட்ரிஸ் ஷா,
“மக்களை குழப்பக்கூடிய அல்லது சுல்தான் குறித்த தவறான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளை வெளியிடக் கூடாது என அன்வாருக்கு அறிவுறுத்துகிறோம்,” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.