கோலாலம்பூர், செப்டம்பர் 19 – ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி இயக்கி, அதில் தானே நடித்திருக்கும் திரைப்படம் ‘அரண்மனை’.
ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த கதை என்றாலும் கூட, சுந்தர் சி தனது வழக்கமான காமெடி பட்டாசுகளை படம் முழுவதும் தூவி, அதே நேரத்தில் மிரட்டலான திரில்லர் காட்சிகளையும் சேர்த்து மிக வித்தியாசமாக இயக்கியிருக்கிறார்.
படம் தொடங்கியது முதல் முடியும் வரை, படம் பார்க்கும் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிப்பதற்கும், பேயைக் கண்டு மிரள்வதற்கும் காட்சிகளுக்கும் பஞ்சமே இல்லை.
தமிழ் சினிமாவில் நெய் குழந்தையாய் நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகாவிற்கு ‘அரண்மனை’ திரைப்படத்தில் முற்றிலும் சவாலான கதாப்பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் கொஞ்ச நேரம் வந்து போனாலும் நம் நெஞ்சில் நின்று விடுகின்றார்.
அதே வேளையில் படத்தில் ஆண்ட்ரியா, ராய் லஷ்மி என்ற இரு கவர்ச்சிக் கன்னிகளையும் அவர்களது பாணியில் கதைக்கு ஏற்ற வகையில் இயக்குநர் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
இது தவிர படத்தில், வினய், சந்தானம், நிதின் சத்யா, கோவை சரளா, சித்ரா லட்சுமணன், மனோபாலா, சுவாமிநாதன், கணேஷ், ஆர்த்தி, ‘காதல்’ தண்டபானி (அமரர்), சரவணன், மேஜர் கௌதம் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘காஞ்சனா’ படத்திற்குப் பிறகு இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்ததை உணர்ந்த சுந்தர் சி, தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி பயமுறுத்தும் பேய் கதையை கூடகலகலப்பாக இயக்கியுள்ளார்.
இந்த படம் கட்டாயமாக திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். நிச்சயமாக ‘அரண்மனை’ திரைப்படம் இரண்டரை மணி நேரங்கள் உங்களை பயமும், நகைச்சுவையும் கலந்த ஒரு இனிய அனுபவத்தை தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
கதைச் சுருக்கம்:
பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தில் ஒரு மிகப் பெரிய அரண்மனை உள்ளது. அந்த பழைய அரண்மனைக்குச் சொந்தக்காரர்களான வினய் குடும்பம் அந்த ஊரின் முக்கியப் புள்ளியான சரவணன் பெயருக்கு மாற்றுவதற்காக ஏற்பாடு செய்கிறார்கள்.
ஆனால் அதில் பல்வேறு தடங்கல்கள் வருகின்றன. அந்த அரண்மனையில் வேலை பார்த்த மூன்று பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். பேய் இருப்பதாக வினயின் மனைவியான ஆண்ட்ரியாவும், தங்கையான ராய் லஷ்மியும் கூறுகின்றார்கள். ஆனால் அதை நம்பாத வினய், அரண்மனையை சரவணன் பெயருக்கு எழுதிக் கொடுக்கும் வேலையில் மும்முரமாகிறார்.
அவ்வேளையில், அரண்மனைக்கு வரும் ஆண்ட்ரியாவின் அண்ணனான சுந்தர் சி அங்கு நடக்கும் சில அசாதாரண நிகழ்வுகளை கண்டுபிடிக்கிறார். அப்போது தான் செல்வி (ஹன்சிக்கா) என்ற பெண் ஒருவர் பற்றிய கதையை சுந்தர் சி அறிந்து கொள்கிறார்.
அவர் யார்? இந்த குடும்பத்திற்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதி மிகவும் திடுக்கிடும் வகையில், மிரட்டலான காட்சிகளுடன் சொல்லப்பட்டிருக்கின்றது.
நடிப்பு
செல்வி என்ற கதாப்பாத்திரத்தில் ஹன்சிக்கா நடித்திருந்தாலும், படம் முழுவதும் நம்மை மிரட்டுவது ஆண்ட்ரியா தான். அதே வேளையில் கவர்ச்சியிலும் ரசிகர்களை அவர் கிறங்கடிக்கத் தவறவில்லை.
ஆண்ட்ரியா இல்லாத காட்சிகளில் ராய் லஷ்மி அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.
படம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத வகையில் சந்தானம் மற்றும் கூட்டணி கலகலப்பை அள்ளி கொட்டியிருக்கிறது.
“தாய் மசாஜ் கேள்விப்பட்டிருப்ப… இது பேய் மசாஜ் டா அப்படி தான் இருக்கும்”
“ஐயோ… ரொமான்ஸ் பண்ணும் போது மனுசனே பேய் மாதிரி கோவப்படுவான்…. பேய் ரொமான்ஸ் பண்ணும் போது தொந்தரவு பண்ணா என்ன செய்யுமோ” போன்ற சந்தானம் பேசும் வசனங்கள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன.
பேயுடன் பேசும் சிறுமியின் கதாப்பாத்திரம் கதைக்கு ஏற்ற தேர்வு என்றாலும், பாதியிலேயே காணாமல் போய்விடுகின்றது.
சாமியாராக கோட்ட ஸ்ரீனிவாசராவ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் பேயை கட்டுப்படுத்தும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களை இருக்கையின் விளிம்பிற்கு வந்து விடும் அளவிற்கு காட்சிகள் பயமுறுத்துகின்றன.
சுந்தர் சி இந்த படத்தின் இயக்குநராக, அதே நேரத்தில் தாநாயகனாக இரண்டையும் சரியாக சமாளித்திருக்கின்றார். அதில் சறுக்கல்கள் ஏதும் இல்லை. வினய் இந்த படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கு அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த காட்சிகளும் சுந்தர் சி, ஆண்ட்ரியாவைச் சுற்றியே நகர்கின்றன.
இசை மற்றும் ஒளிப்பதிவு
இந்த படத்திற்கு ஒளிப்பதிவு சுந்தர் சி -ன் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் யுகே செந்தில்குமார் செய்துள்ளார். கிராமத்தைச் சுற்றி நகரும் காட்சிகள் மிக அழகு.
அரண்மனையை மிகவும் பிரம்மாண்டமாக கதைக்கு ஏற்றவாறு காட்டியிருக்கின்றார்.
இதுதவிர படத்தில் படத்தொகுப்பு மிகவும் சிறப்பு. காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், குழப்பமின்றியும் நகர்வதற்கு ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு கைகொடுக்கின்றது. கிராபிக்ஸ் காட்சிகள் மிக அழகாக வந்துள்ளன. குறிப்பாக சந்திரகிரகணம், மாலை நேர மேகங்கள் ஆகியவை நம்மை அறியாமல் அச்சத்தை உள்ளூர ஏற்படுத்துகின்றன.
என்றாலும், சில காட்சிகளில் கதாப்பாத்திரங்கள் மஞ்சளாக தெரிவதைக் குறைத்திருக்கலாம்.
இந்த படத்திற்கு பின்னணி இசையும், பாடல்களும் பரத்வாஜ் மிகச் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பெட்ரோமாஸ் லைட்டு, கத்தி பார்வைக்காரி போன்ற பாடல்கள் இனிமை.
மொத்தத்தில் அரண்மனை – பயம் கலந்த கலகலப்பு.
– ஃபீனிக்ஸ்தாசன்
அரண்மனை முன்னோட்டம்: