Home தொழில் நுட்பம் புதிய ஐஓஎஸ் 8 – இல் ‘செல்லியல்’

புதிய ஐஓஎஸ் 8 – இல் ‘செல்லியல்’

965
0
SHARE
Ad

Selliyal Logo 440 x 215கோலாலம்பூர், செப்டம்பர் 19 – அமெரிக்க நேரப்படி கடந்த செப்டம்பர் 17  முதல் உலகம் முழுவதும் பயனர்களுக்காக பதிவிறக்கம் செய்யப்படும் விதத்தில் ஐஓஎஸ் 8 இயங்கு தளத்திற்கான மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது பதிவிறக்கம் செய்யப்படும் ஐஓஎஸ் 8 இயங்கு தளத்திற்கேற்ப ‘செல்லியல்’ தளமும் புதுப்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்வழி புதிதாக ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்  வாங்குபவர்களும் அந்த திறன்பேசிகளில் செல்லியல் செயலியை எவ்வித சிக்கலும் இன்றி பயன்படுத்தி மகிழலாம்.

புதிய ஐபோன் 6 பிளஸ் பெரிய குறுக்குத் திரை கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், செல்லியல் தளமும் அதற்கேற்றவாறு வடிவத்தில்மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று முதல் பயனர்களின் பயன்பாட்டுக்காக செல்லியல் 2.0.11, ஐஓஎஸ் கருவிகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் கருவிகளிலும் செல்லியல் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படலாம்.

புதிய குறிப்பொலிகள்

அண்மையில் அண்ட்ரோய்டு தளங்களுக்காக செல்லியல் மேம்படுத்தப்பட்டபோது புதிய செய்தி அறிவிப்புகளுக்கான குறிப்பொலியாக நமது பண்பாட்டைக் குறிக்கும் வகையிலான மத்தள ஒலி கொண்ட குறிப்பொலி (message alert tone) சேர்க்கப்பட்டது.

இந்த குறிப்பொலி இனி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐஓஎஸ் கருவிகளுக்கான செயலியிலும் ஒலிக்கத் தொடங்கும்.

மற்றொரு முக்கிய மேம்பாடு, புதிய ஐபோன்களின் குறுக்குத் திரை அளவுகளாகும். புதிய ஐபோன் 6இன் திரை குறுக்களவு 4.7  அங்குலமாக இருக்கும். அதே வேளையில், தனது மரபில் இருந்து விலகி, பயனர்களின் பெருகி வரும் விருப்பத்திற்கேற்ப ஏற்ப, சற்றே பெரிய 5.5 அங்குல அளவு கொண்ட குறுக்குத் திரையோடு ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகளை  ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

முத்து நெடுமாறன் கருத்து 

ஆண்டிராய்டு தளங்களுக்கென வடிவமைக்கப்படும் செல்லியல் பல்வேறு அளவிலான குறுக்குத் திரைகளைக் கொண்ட திறன்பேசிகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் கருவிகளோ மிகத் துல்லியமாக அளவிடப்பட்டத் திரை அளவையும், திரையின் புள்ளி எண்ணிக்கையையும் (screen resolution) கொண்டிருக்கும். இதனால் ஆப்பிள் கருவிகளுக்கான செயலிகளை வடிவமைப்பவர்கள் துல்லியமான அளவுகளோடு அவற்றை வடிவமைக்க முடிகின்றது என்பதோடு, பயனர்களுக்கு சிறந்த பயன்பாட்டு அனுபவங்களையும் வழங்க முடிகின்றது.  அதற்கேற்ப புதிய ஐபோன் 6 வகைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செல்லியல் செயலியும் துல்லியமான அளவுகொண்ட செற்களின் தோற்றத்தோடு இருக்கும் என்பதோடு, திரையில் தெரியும் செய்திகள் சரியான விதத்தில் படிக்கப்படும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தையும் வழங்கும்” என செல்லியல் தளத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

செல்லியல் பயன்பாடு அதிகரிக்கும்

புதிய ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் கருவிகளின் வருகையாலும், ஐஓஎஸ் 8 இயங்குதளத்தின் அறிமுகத்தாலும் செல்லியல் செய்தி இணையத் தளத்தின் பயன்பாடு உலக அளவில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் மொழியில் செய்திகளை உடனுக்குடன், அதிநவீன தொழில் நுட்பத் திறனோடு தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு வழங்குவதில் செல்லியல் நிருவாகம், மேலும் உற்சாகமடைந்துள்ளது.

புதிய ஐஓஎஸ் 8 இயங்குதளத்திற்கான செல்லியலின் மேம்படுத்தப்பட்ட 2.0.11 செயலியை ஆப்பிள் கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் எப்ஸ்டோர் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தால் புதிய பதிப்பு தானியக்க முறையில் மேம்படுத்தப்படும்.