இலண்டன், செப்டம்பர் 20 – பிரிட்டனிலிருந்து பிரிந்து, தனி நாடு கோரிக்கையை முன்வைத்து ஸ்காட்லாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால் ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சல்மாண்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, தனி நாடாக பிரிந்து, தனித்த ஜனநாயகமாக செயல்படுவோம் என்ற கோரிக்கையை முன் வைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தவர் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரான அலெக்ஸ் சல்மாண்ட். (படம்) இவர் ஸ்காட்லாந்தின் பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.
இந் நிலையில் நேற்று முன்தினம், தனி நாடு குறித்த மக்கள் வாக்கெடுப்பில் 55.3 சதவீத மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருக்கவும், 44.7 சதவீத மக்கள் வேண்டாம் என்று வாக்களித்தனர்.
பெரும்பான்மையான மக்கள் இங்கிலாந்திற்கு ஆதரவாக வாக்களித்தால், அலெக்ஸ் சல்மாண்ட்டின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அவர் தனது பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
மேலும், வரும் நவம்பர் மாதம் ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமரும், கட்சியின் புதிய தலைவரும் தேர்வு செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.