Home நாடு “பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” – ஹாடி அவாங் கடும் தாக்கு

“பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்” – ஹாடி அவாங் கடும் தாக்கு

573
0
SHARE
Ad

Hadi Awang PAS President பத்து பகாட்,  செப்டம்பர் 20 – சிலாங்கூர் மாநில பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேரை பிகேஆர் விலைக்கு வாங்கிவிட்டதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் குற்றம்சாட்டி உள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் தலைவர் வான் அசிசா தேர்வு செய்யப்பட அந்த குறிப்பிட்ட 2 பாஸ் உறுப்பினர்களும் ஆதரவளித்திருப்பதற்கு அவர் தமது கடும் கண்டனத்தைத்  தெரிவித்துள்ளார்.

“அவர்கள் (பிகேஆர்) விரும்பியதைப் பெற முடியவில்லை. அதனால் இருவரையும்
எங்களிடம் இருந்து திருடியுள்ளனர்,” என்றார் ஹாடி அவாங்.

#TamilSchoolmychoice

அவரது இந்த வெளிப்படையான நேரடியான தாக்குதல் பிகேஆர், பாஸ் இடையேயான
விரிசலை மேலும் பெரிதாக்கும் என கூறப்படுகிறது.

நடந்து முடிந்த பாஸ் கட்சியின் முக்தாமார் எனப்படும் பேராளர் மாநாடு, பிகேஆர் கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் சுமுக உறவுகள் மீண்டும் திரும்புவதற்கு வித்திடும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஹாடி அவாங்கின் தாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் அதில் போட்டியிடும் பாஸ் கட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் குறித்து குறிப்பிட்ட ஹாடி அவாங், அந்த சத்தியப் பிரமாணத்தின் முன்பு,  வான் அசிசா மந்திரி பெசாராவதற்கு ஆதரவு தெரிவித்து பாஸ் உறுப்பினர்கள் இருவரும் கையெழுத்திட்டது பெரிய விஷயமல்ல என்றார்.

“விசுவாசத்திற்காக எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணம் பெரிதா? அல்லது வான் அசிசாவுக்காக கையெழுத்திட்டது பெரிதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மந்திரி பெசார் பதவி மீது பாஸ் கட்சிக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்றாலும், வேறு வழியின்றி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியிருந்ததாக ஹாடி அவாங் தெரிவித்தார்.

“பிகேஆரைவிட எங்களுக்கு சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளனர். எனினும் மந்திரிபெசார் பதவி மீதான வேட்கை எங்களுக்கு கிடையாது. இரு தரப்பும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர வேண்டும்,” என்றார் ஹாடி அவாங்.

உலு கிளாங் உறுப்பினர் சாரி சுங்கிப் மற்றும் மோரிப் உறுப்பினர் ஹஸனால் பஹாருடீன் ஆகிய இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் வான் அசிசா மந்திரி பெசாராக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற பாஸ் கட்சியின் 60ஆவது
முக்தாமர் என்ற பேராளர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.