பஹ்ரைன், செப்டம்பர் 22 – அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் தங்களது சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்காக விசா அனுமதியில் உள்ள கெடுபிடிகளை தளர்த்தி, புதிய விசா கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கு பஹ்ரைன் விசா எளிதான முறையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா வழங்குதல் தொடர்பான புதிய கொள்கைகளை பஹ்ரைன் தலைவரான இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலிபா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு அமைச்சரவை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து புதிய கொள்கைகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இணையம் மூலம் விசா வழங்கும் இந்த நடைமுறை மொத்தம் 101 நாடுகளுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. குறிப்பாக பஹ்ரைனுக்கு அதிகம் பயணம் மேற்கொள்ளும் இந்திய மக்களுக்கு சிறப்பு சலுகையாக, புதிய திட்டத்தின்கீழ் அங்கு ஒரு மாதத்திற்கு தங்குவதற்கான விசா அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த 2011-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 1.7 பில்லியன் டாலர்கள் ஆகும்.
இது தொடர்பாக அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் கமல் பின் அகமது கூறுகையில், “வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முறையான முதலீடுகள் இவையே பஹ்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். தற்போதய நடைமுறை பஹ்ரைன் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.