அபுதாபி, ஆகஸ்ட் 17- அரபு நாட்டிலுள்ள இந்துக்கள் வழிபடும் வகையில், முதன்முறையாக அங்கு இந்துக் கோவிலைக் கட்ட நிலம் ஒதுக்கி அரபு நாட்டு அரசாங்கம் உத்த்ரவிட்டுள்ளது.
நேற்று பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றார்.
34 ஆண்டுகள் கழித்து அரபு நாட்டிற்குச் செல்லும் முதல் பிரதமர் என்கிற பெருமையை மோடி பெறுகிறார். 1981-ஆம் ஆண்டு இந்திராகாந்தி அரபு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அதன்பின்பு இந்தியப் பிரதமர் யாரும் அரசு நாடுகளுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அபுதாபி சென்றடைந்த மோடிக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையின் விளைவாக அங்கே மிகப் பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. இதுவரை இல்லாமல் தற்போது முதல்முறையாக அங்கே இந்துக் கோவிலைக் கட்ட அரபு அரசு தீர்மானித்து அதற்கான பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
“இந்தியச் சமூகத்தின் நீண்ட காலக் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பிற்குப் பிரதமர் மோடி தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் உள்ள பிரபல ஷேக் ஜயீத் மசூதிக்குச் சென்று பார்வையிட்டார்.அங்குள்ள தொழிலாளர்களிடம் அன்பாக உரையாடினார்.பின்பு அங்கு உற்சாகமாகச் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.