எடின்பர்க், செப்டம்பர் 22 – ஸ்காட்லாந்தில் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால், அங்கு மோதலும், கலவரமும் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்தை தனி நாடாக பிரிக்க நினைத்த ஸ்காட்லாந்து மக்கள், பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர், இதனை ஒப்புக் கொண்ட இங்கிலாந்து, சமீபத்தில் அதற்கான பொது வாக்கெடுப்பை நடத்தியது. அதில் ஸ்காட்லாந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்களும், ஆதரவு தெரிவித்து 44 சதவீத மக்களும் வாக்களித்தனர்.
இதன் காரணமாக இங்கிலாந்திடம் இருந்து ஸ்காட்லாந்து பிரிய முடியவில்லை. இதனை கொண்டாடும் விதத்தில் எதிர் தரப்பினர் கிளாஸ்கோ நகரின் ஜார்ஜ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை இரவு மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். இது ஸ்காட்லாந்து ஆதரவு மக்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியதால் இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
எனினும் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். இதற்கிடையே இக்கலவரம் நாடு முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதனை தடுக்க பல நகரங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.