Home இந்தியா ஐ.நா.வில் ராஜபக்சே பேசுவதற்கு கண்டனம்: கருணாநிதி தலைமையில் திமுக 25-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

ஐ.நா.வில் ராஜபக்சே பேசுவதற்கு கண்டனம்: கருணாநிதி தலைமையில் திமுக 25-ம் தேதி ஆர்ப்பாட்டம்!

625
0
SHARE
Ad

karunanidhi,சென்னை, செப்டம்பர் 23 – ஐ.நா. மன்றத்தில் 25-ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதற்கு கண்டனம் தெரிவித்து, கருப்பு தினம் அறிவித்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அழைப்பை ஏற்று அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. இளைஞர் அணியினருக்கு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “ஈழத்தமிழர் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக வழியில் தொடர்ந்து பாடுபட்டு வருகின்ற இயக்கம் தி.மு.க.

இலங்கையில் தக்க அரசியல் தீர்வு ஏற்பட்டு ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளும் – வாழ்வுரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான முயற்சிகளைக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இதன் ஒருகட்டமாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த இலங்கை அதிபர் ராஜபக்சேவோ அல்லது அந்த நாட்டின் எந்தவொரு பிரதிநிதியோ ஐ.நா. அவையில் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என 26-8-2014 அன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ‘டெசோ’ அமைப்பின் தீர்மானம் மூலமாக ஐ.நா. மன்றத்தை வலியுறுத்தியது.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், தமிழ் இனப் படுகொலைகள் இவற்றிற்காக ஐ.நா. மன்றம் மூலமாக அனைத்துலக விசாரணையை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், அதன் விசாரணைக் குழுவையே தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்த நிலையில் அவரையே அந்த ஐ.நா. மன்றத்தில் உரையாற்ற அனுமதிப்பது என்பது அனைத்துலகச் சட்டங்களை மீறிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பது போன்றதாகும்.

karunanidhiஇதனை அனுமதிக்கக் கூடாது என ‘டெசோ’ சார்பில் தலைவர் கருணாநிதி தீர்மானம் நிறைவேற்றியதுடன், பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினார்.

எனினும் இதுகுறித்து மத்திய அரசும்- ஐ.நா. மன்றமும் உரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாத நிலையில் வரும் செப்டம்பர் 25 அன்று ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்றுவதற்கு தாய்த் தமிழகத்தின் முழுமையான எதிர்ப்பை ஆழமாகப் பதிவு செய்யும் விதத்தில், அன்றைய தினத்தை ‘கருப்பு தின’மாகக் கடைபிடிக்கும்படி கருணாநிதி நமக்கு ஆணையிட்டுள்ளார்.

கழகத்தின் இளைஞர் அணி சார்பிலும் ‘கருப்பு தினம்’ குறித்து பொதுமக்களுக்கு விளக்கிப் பெருமளவில் பங்கேற்கச் செய்யும் விதத்தில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அப்பணியில் இளைஞர் அணியினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, செப்டம்பர் 25 அன்று நம் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் வகையில் கறுப்புச் சின்னம் அணிந்தும், கறுப்புச் சட்டை அணிந்தும், தங்கள் பகுதியில் கறுப்புக் கொடி ஏற்றியும் கறுப்பு நாளைக் கடைப்பிடித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.