சென்னை, செப்டம்பர் 23 – அமாவாசையை முன்னிட்டு இன்று மாலை 3 மணியளவில் முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் 27-ம் தேதி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் பெங்களூர் மற்றும் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை பலப்படுத்தும் விசயங்களில் கர்நாடக – தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்ப்பை ஒட்டி பெங்களூரில் அதிமுகவினர் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள பெரும்பான்மையான தங்கும் விடுதிகளை அவர்கள் முன்கூட்டியே தங்குவதற்காகப் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று முதல்வர் ஜெயலலிதா மகாளய அமாவாசையை ஒட்டி காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்ய உள்ளார் என அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இன்று காலை 3 மணியளாவிலேயே ஜெயலலிதா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரகசிய வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு வழிபாடு எனக் கூறப்படுகிறது.