ரோம், செப்டம்பர் 23 – கிழக்கு லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணிகள் படகு ஒன்று சென்றது. இந்த படகில் 95 பேர் இத்தாலியில் குடிபெயர்வதற்காக பயணம் செய்தனர்.
லிபியாவில் இருந்து 48 கிலோ மீட்டர் தூரம் கடலில் சென்றபோது, திடீரென நடுக்கடலில் படகு கவிழ்ந்தது. உடனே இத்தாலி நாட்டைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் படகுகளுடன் சென்று கடலில் மூழ்கிய 55 பேரை உயிருடன் மீட்டனர். இன்னும் 40 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
சிரியாவில் நடந்து வரும் போர் மற்றும் ஆப்பிரிக்க நாடான எரிட்டேரியாவில் நடந்து வரும் ராணுவ ஆட்சி போன்ற காரணங்களால் இருநாடுகளில் இருந்தும் இதுவரை கடல்மார்க்கமாக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் இத்தாலி சென்று குடியேறி உள்ளனர் என்று ஐ.நா. அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.