தைவான் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி கடந்த சில காலமாக தோல்விப் பாதையில் சென்றிருந்தாலும், விரைவில் மீண்டு எழுந்த அந்நிறுவனம், புதிய தொழில்நுட்பங்களை திறன்பேசிகளில் அறிமுகப்படுத்தி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புகிறது. எச்டிசி-1 எனும் வரிசையில் இந்நிறுவனம் வெளியிட்டு வரும் உயர்நிலை திறன்பேசிகள் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது எனலாம்.
இந்நிலையில் அந்நிறுவனம், ஆசிய அளவில் மதிப்பு மிக்க சந்தையாக கருதப்படும் இந்தியாவில், தனது அடுத்த தயாரிப்பினை வெளியிடுகின்றது.
எச்டிசி நிறுவனம் நேற்று முதல் தனது எச்டிசி டிசையர் 820 மற்றும் அதன் தொடரான 820q ஆகிய இரண்டு திறன்பேசிகளை மட்டுமே அறிமுகப்படுத்தும், என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அந்நிறுவனம் வியப்பளிக்கும் வகையில், விலை மலிவான எச்டிசி 816G திறன்பேசிகளையும் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் அந்நிறுவனம் இந்த புதிய திறன்பேசிகளை வெளியிடுவதற்கு முக்கியக் காரணம் ஆசிய அளவில் பெரும் வர்த்தகத்தை கொண்டிருக்கும் இந்திய சந்தைகளும், பயனர்களிடம் உள்ள திறன்பேசிகள் பற்றிய ஆர்வமும் தான்.
10 இந்திய மொழிகளின் உள்ளீடு
இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தமிழ் உட்பட பத்து இந்திய மொழிகளை உள்ளீடு செய்யும் வசதிகளைக் கொண்டு இந்த திறன் பேசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
எச்டிசி டிசையர் 820 திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றி கீழே காண்போம்:
அண்ட்ரோய்டு 4.4 கிட்கேட் இயங்குதளத்தில் இயங்கக் கூடிய இந்த டிசையர் 820 திறன்பேசிகள், சிறந்த இயங்கு திறனுக்காக 64 பிட்-ஆக்டா கோர் சினாப்டிராகன் 615 (Octa core Snapdragon 615) செயலாக்கியைக் (Processor)- ஐ கொண்டுள்ளது. இதன் முதன்மை நினைவகம் 2ஜிபி கொண்டதாகவும், உள் நினைவகம் 16 -ஜிபியினைக் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எனும் தம்படத்திற்காக 8எம்பி முன்புற கேமராவும், 13எம்பியில் பிற்பகுதி கேமராவும் இந்த திறன்பேசிகளில் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறந்த திரை மற்றும் ஒலி ஒளி வசதியினைக் கொண்டுள்ள இந்த திறன்பேசிகள், எச்டிசிக்கு சிறந்த விற்பனை விரிவாக்கத்தை ஏற்படுத்தித் தரும் என்று கூறப்படுகின்றது.