புதுடெல்லி, செப்டம்பர் 26 – இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் விஜய் மல்லையா இடம் பெறவில்லை. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8-வது வருடமாக முதல் இடத்தில் உள்ளார் என போர்ப்ஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.
அவரது சொத்து மதிப்பு 260 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்து 2,360 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என்று போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் மிகப் பெரும் 100 பணக்காரர்கள் பட்டியலில், தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பெயர் இந்த ஆண்டு இடம் பெறவில்லை.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் அவர் 84-ஆவது இடத்தில் இருந்தார். இந்தப் பட்டியலில் எட்டாவது முறையாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முதல் முறையாக, இந்தப் பட்டியலில் முதல் நூறு இடங்களைப் பிடித்த ஒவ்வொருவரின் சொத்து மதிப்பும் 100 கோடி டாலர்களை (சுமார் ரூ.6,117 கோடி) மிஞ்சுகிறது.
முதலிடத்தை வகிக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2,360 கோடி டாலர்கள் (ரூ.1,44,373 கோடி) ஆகும். இரண்டாவது இடத்தில் சன் ஃபார்மா தலைவர் திலீப் சாங்வியும், மூன்றாமிடத்தில் விப்ரோ நிறுவனத்தின் அஜீஸ் பிரேம்ஜியும் உள்ளனர்.
இரும்புத் தொழிலதிபர் லக்ஷ்மி மித்தல் இரண்டாமிடத்திலிருந்து நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார் என போர்ப்ஸ் செய்தி இதழ் தெரிவித்துள்ளது.