கொழும்பு, செப்டம்பர் 26 – இலங்கை மனித உரிமை மீறல் விவகாரத்தில், ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம்பெற்ற சில பேரின் தவறான உள்நோக்கத்தினாலும், நடவடிக்கைகளாலும் இலங்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ராஜபட்சே குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. சபைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:- “இலங்கையில் மறுசீரமைப்புப் பணிகள் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. எனினும், அந்தச் சாதனைகள் பலரின் சதியால் நேர்மையற்ற முறையில் மூடி மறைக்கப்படுகின்றன.”
“உலக நாடுகளால் மனித நேய உதவிகள் அடிப்படையில் இலங்கை அணுகப்படும் விதம் மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறாக உள்ளது. இதற்கு மனித உரிமை ஆணையத்தில் உள்ள சிலரின் உள்நோக்கமே காரணமாகும்”.
“அவர்கள் ஏற்படுத்திய ஒழுங்கற்ற நடவடிக்கைகளால் இலங்கை இன்று வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் மறுசீரமைப்பு, மறுவாழ்வு, நல்லிணக்கப் பணிகளில் இலங்கை புரிந்துள்ள சாதனையை மூடி மறைக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்களின் இந்த செயல்களை நாங்கள் பொருள்படுத்துவதே கிடையாது” என்று ராஜபட்சே கூறியுள்ளார்.
ஐ.நா.மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையர் நவீபிள்ளையை தான் இலங்கை அதிபர் ராஜபட்சே மறைமுகமாக குற்றம் சாட்டுயுள்ளார் என பொது நோக்கர்கள் யூகங்களை கூறினாலும், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் நவீ பிள்ளையின் செயல்பாடுகள் பாரபட்சம் அற்றதாகவே இருந்துள்ளது என பாராட்டு தெரவித்துள்ளன.