கோலாலம்பூர், செப்டம்பர் 26 – பிலிம் கொம்பைன் நிறுவன தயாரிப்பில், 3 குழந்தை நட்சத்திரங்களை முக்கியக் கதாப்பாத்திரங்களாக நடிக்க வைத்து, நானோ டெக்னாலஜி என்ற விஞ்ஞான தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட கதையை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள மலேசியத் திரைப்படம் “3 ஜீனியசெஸ்”.
இந்த திரைப்படத்தில் மலேசிய நட்சத்திரங்களான சசி அப்பாஸ், அகோந்திரன், சங்கீதா கிருஷ்ணசாமி, நகைச்சுவை நடிகர் சத்யா, பெருமாள் ஆகியவர்களுடன், பிரபல இயக்குநர் கே.பாக்கியராஜ், டான் (லண்டன்), கவிதா, ஜாஸ்வீர் இந்த திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தேசிய நிலையில் நடைபெறும் அறிவியல் போட்டியில் வெற்றி பெறும் கௌதம், கனி, கிரேஸ் ஆகிய மூன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பேராசிரியர் இராமானுஜத்தை (பாக்கியராஜ்) சந்திக்கின்றனர். இவர்களின் நுட்பமான அறிவுத்திறனை கண்டு வியக்கும் பேராசிரியர் அம்மாணவர்களை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொள்கின்றார்.
அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி நாச வேலையில் ஈடுபடும் கும்பலுக்குத் தெரிய வர, இந்த கண்டுபிடிப்பை அபகரிக்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபடுகின்றது. இந்த பேராபத்தில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகின்றார்கள்? அவர்களின் கண்டுபிடிப்பு எப்படி வெற்றி பெறுகின்றது? போன்றவற்றை பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பி.கே.ராஜ்.
இந்த திரைப்படத்திற்கு மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
நடிப்பு:
கௌதம், கனி, கிரேஸ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும், முதல் படம் போலே அல்லாமல் மிக இயல்பாக நடித்திருக்கின்றனர்.
அதே வேளையில் அவர்களின் பெற்றோர்களாக நடித்திருப்பவர்களும் மிக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
குறிப்பாக நடிகர் அகோ குடும்பம் இஸ்லாமிய கலாசாரப்படியும், சசி குடும்பம் கிறிஸ்தவ கலாசாரப்படியும் படியும், டான் குடும்பம் இந்து கலாசாரப்படியும் அருமையான நடித்திருக்கின்றனர்.
படம் பார்க்கும் குழந்தைகளும், பார்வையாளர்களும் தங்களை மறந்து சிரிப்பதற்கு முதல் பாதி முழுக்க பள்ளி ஆசிரியராக வரும் நடிகர் சத்யாவின் நகைச்சுவை கைகொடுத்திருக்கிறது.
பள்ளியின் தலைமையாசிரியராக நடிகர் பெருமாள் கனகச்சிதமாகப் பொருந்துகிறார்.
கடினமான கணக்கை கூட எளிதில் தீர்த்துவிடும் கனியின் திறமை, கணினியை சரிசெய்யும் கிரேசின் திறமை, தனது கார் பழுது பார்க்கும் கௌதமின் திறமை போன்ற காட்சிகள் படம் பார்க்கும் பெற்றோர்களுக்கு தங்களது பிள்ளைகளையும் இது போன்ற திறமைசாலிகளாக வளர்க்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துகின்றது.
இரண்டாம் பாதி முழுக்க விஞ்ஞானியாக வரும் நடிகர் பாக்கியராஜ் தனக்கே உரிய பாணியில் மிக அழகாக நடித்திருக்கிறார்.
இசை
இந்த படத்திற்கு அதீஸ் உத்ரியன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை கவிஞர் மா.புகழேந்தி எழுதியுள்ளார்.
படத்திலுள்ள அனைத்து பாடல்களும் மனதில் நிற்கின்றன.
ஒரே மலேசியாக் கொள்கையை வலியுறுத்துவது போல் இந்திய, சீன, மலாய் கலாசார அடிப்படையில் அதற்கேற்ற உடையணிந்து, நடனமாடி காட்சிகள் படைத்திருப்பது பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றது.
தொடக்கப் பாடல் ‘எங்களின் தேசம் மலேசியா’ புதிய உற்சாகத்தைக் கொடுக்கின்றது.
மலேசிய மக்கள் அனைவரும் தங்களது ஜீனியஸ்களையும் அழைத்துக் கொண்டு, குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய திரைப்படம்.
-ஃபீனிக்ஸ்தாசன்