Home கலை உலகம் மலேசியாவின் முதல் அறிவியல் தமிழ் திரைப்படம் “3 ஜீனியசெஸ்” – செய்தியாளர் சந்திப்பு!

மலேசியாவின் முதல் அறிவியல் தமிழ் திரைப்படம் “3 ஜீனியசெஸ்” – செய்தியாளர் சந்திப்பு!

798
0
SHARE
Ad

IMAG0267

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 –  ஃபிலிம் கொம்பைன் நிறுவன தயாரிப்பில், 3 குழந்தை நட்சத்திரங்களை முக்கியக் கதாப்பாத்திரங்களாக நடிக்க வைத்து, அறிவியல் சம்பந்தப்பட்ட கதையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ள மலேசியத் திரைப்படம் “3 ஜீனியசெஸ்”.

இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை தலைநகர் கொலீசியம் திரையரங்கில் நடைபெற்றது. பிரபல வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் நிகழ்ச்சியை மிக அழகாக வழிநடத்த, இதில் ஏராளமான மலேசிய நட்சத்திரங்களும், செய்தியாளர்களும் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

பி.கே.ராஜ் கதை,திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குநர் பாக்கியராஜ் விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க மலேசியாவிலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மலேசிய நட்சத்திரங்களான சசி அப்பாஸ், அகோந்திரன், சங்கீதா கிருஷ்ணசாமி, நகைச்சுவை நடிகர் சத்யா ஆகியோரும் இந்த திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை என்ன?

3 G 1

மலேசியாவில் இதுவரை எடுக்கப்படாத அறிவியல் கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படம் “3 ஜீனியசெஸ்”.

தேசிய நிலையில் நடைபெறும் அறிவியல் போட்டியில் வெற்றி பெறும் கௌதம், கனி, கிரேஸ் ஆகிய மூன்று தமிழ்ப்பள்ளி மாணவர்களும், பேராசிரியர் இராமானுஜத்தை சந்திக்கின்றனர். இவர்களின் நுட்பமான அறிவுத்திறனை கண்டு வியக்கும் பேராசிரியர் அம்மாணவர்களை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை மேற்கொள்கின்றார்.

அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி நாச வேலையில் ஈடுபடும் கும்பலுக்குத் தெரிய வர, இந்த கண்டுபிடிப்பை அபகரிக்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபடுகின்றது. இந்த பேராபத்தில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகின்றார்கள்? அவர்களின் கண்டுபிடிப்பு எப்படி வெற்றி பெறுகின்றது? போன்றவற்றை பல விறுவிறுப்பான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பி.கே.ராஜ்.

இசை வெளியீட்டு விழா

3 G

3 ஜீனியசெஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் தமிழகத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.இதில் இயக்குநர்கள் பாக்கியராஜ், ஸ்டான்லி, மன்சூர் அலிகான் போன்ற பிரபல நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அறிவியல் சம்பந்தப்பட்ட படம் என்பதால் சிறப்பு விருந்தினராக மலேசியா சார்பாக செல்லியல் மற்றும் செல்லினம் செயலிகளின் தொழில்நுட்ப வடிவமைப்பாளர் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டார்.

மேலும் மலேசியாவில் இருந்து தாய்மொழி ஆசிரியர் எஸ்.பி சரவணன், குருஸ்ரீ மாஸ்டர் சந்திரமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்திற்கு அதீஸ் உத்ரியன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை கவிஞர் மா.புகழேந்தி எழுதியுள்ளார். இந்த படத்திலுள்ள பாடல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரே மலேசியா கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்திய, மலாய், சீன கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் 

“3 ஜீனியசெஸ்” திரைப்படத்தை சிவா ஜி தயாரித்துள்ளார். இணை தயாரிப்பை விஜயேந்திரன், சந்துருவும், தயாரிப்பு நிர்வாகத்தை புண்ணியமூர்த்தி கணேசனும் செய்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு மகேஷ் கே தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சிவா ஜி கூறுகையில், “இன்றைய தமிழ் படங்களில் காதல் அல்லது வெட்டு குத்து சண்டை போன்றவற்றை தான் காட்டுகிறார்கள். இது போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் “3 ஜீனியசெஸ்” திரைப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால் தான் இதை மிகவும் கஷ்டப்பட்டு தயாரித்தேன். இந்த திரைப்படம் அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில், மலேசியப் பிரபலங்களான இயக்குநர் சி.கே குமரேசன், விஜய் எமெர்ஜென்சி, விஜயராணி அஸ்ட்ரோ, நடிகர் சசிதரன், நடிகர் ‘சம்பந்தன்’ கிஷோர், பாடலாசிரியர் யுவாஜி, தாய்மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர் எஸ்.பி.சரவணன், மின்னல் பண்பலை அறிவிப்பாளர் ரவின் சண்முகம் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

மேலும், சிறப்பு விருந்தினராக மஇகா தகவல் தொடர்பு தலைவர் எல்.சிவசுப்ரமணியமும் கலந்து கொண்டார்.

விரைவில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவுள்ள இந்த “3 ஜினியசெஸ்” திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் மலேசியா முழுவதும் 35 திரையரங்களுக்கும் மேல் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்