ஆகஸ்ட் 30 – அண்மையக் காலங்களில் இந்தியத் தகவல் ஊடகங்களில் முன் பக்கச் செய்திகளாக இடம் பெற்று வருபவை மார்கண்டேய கட்ஜூ என்பவரின் சூடான கருத்துகள்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற இவர் காஷ்மீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கின்றார்.
திராவிடர்களும், புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான் என்பதும், சமஸ்கிருதம்தான் இந்தியா முழுமையையும் இணைக்கக் கூடிய சிறந்த மொழி என்பதும் – இவர் அண்மையில் கொளுத்திப் போட்ட – பலத்த விவாதத்தையும் கிளப்பிய – கருத்துச் சரவெடி.
தென்னிந்தியாவைப் பற்றிப் புரிந்து கொள்ள ஆர்வத்துடன் தமிழ் படித்தவர். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்துவிட்டு ஒரு வருடம் டிப்ளமா படிப்பாக தமிழ் மொழியைப் படித்திருக்கின்றார்.
தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்கி பேச்சுத் தமிழையும் படித்திருக்கின்றார் மார்கண்டேய கட்ஜூ.
அண்மையில் ஆனந்த விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றில் பல இந்திய மொழிகளிலும் சமஸ்கிருதம் கலந்துள்ளது எனக் குறிப்பிட்டு,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற முதல் குறளில் உள்ள அகர, ஆதி, பகவன், உலகு என்ற நான்கு வார்த்தைகளும் சமஸ்கிருதம்தான்” – என்று கூறியிருக்கின்றார்.
பொதுவாக, திருக்குறள் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் நூல் என்றும், சமஸ்கிருதம் கலவாத ஆதிகாலத் தமிழ் நூல் என்றும் பல தருணங்களில் நாம் படித்திருக்கின்றோம்.
பலர் கூறக் கேட்டிருக்கின்றோம்.
மார்கண்டேய கட்ஜூவின் கூற்றுப்படி பார்த்தால், ஏழு வார்த்தைகள் கொண்ட முதல் குறளிலேயே நான்கு சமஸ்கிருத வார்த்தைகளை திருவள்ளுவர் கோர்த்திருக்கின்றாரா?
அவ்வாறு கூறியுள்ள கட்ஜூவும் ஆழ்ந்த படிப்பறிவும், சட்ட அறிவும் கொண்ட – தமிழை ஓரளவுக்குப் படித்துள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி.
உண்மையில் திருக்குறள் சமஸ்கிருதம் கலவாமல் எழுதப்பட்ட நூலா?
அல்லது அதில் சமஸ்கிருதமும் பின்னிப் பிணைந்துள்ளதா?
அறிவாய்ந்த தமிழறிஞர்கள் விளக்குவார்களா?
-இரா.முத்தரசன்