பெங்களூர், செப்டம்பர் 26 – சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டியும், பெங்களூருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வருவதையொட்டியும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவார்கள் என்று பெங்களூர் போலீசார் எதிர்பார்க்கின்றனர். அதையடுத்து தமிழக எல்லையில் பல்வேறு இடங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். அதைத் தவிர தமிழக எல்லையிலும் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் தமிழக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை பெங்களூர் பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜராக ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெங்களூர் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன் கூறியதாவது: “தமிழக முதல்வர் வருகையையொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தையொட்டி சிறப்பு போலீஸ் படை மற்றும் பல்வேறு தரப்பட்ட படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுவார்கள்.
காவலர்கள் உள்பட 5000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். முதல்வருடன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழக எல்லையில் 100 சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.