நெல்லை, செப்டம்பர் 28 – சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
கடந்த 18 வருடமாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.
அதோடு ஜெயலலிதாவிற்கு ரூ. 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கு தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப் பட்டதையடுத்து அவரது தமிழக முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோனது.
இதனால் ஆவேசமடைந்த அதிமுகவினர் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து மாநிலத்தின் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பையடுத்து ஆங்காங்கே திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
அதன்படி, கும்பகோணம் ஒன்றியம் உள்ளூர் ஊராட்சியில் தி. கணேசன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.