ஜகார்டா, அக்டோபர் 01 – இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையாக வர்த்தகம் செய்து வரும் மலேசிய நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது.
இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில், வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையான பங்கினை வகித்து வருகின்றன. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். வெளிநாட்டு வர்த்தகர்கள் மூலம் இந்தோனேசியாவிற்கு பெரு வாரியான வருவாய் இருந்த போதிலும், உள் நாட்டு உற்பத்தியாளர்களைக் கருத்தில் கொண்டு இந்த புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இது பற்றி அந்நாட்டு வேளாண்துறையின் பயிர் உற்பத்தி துறைக்கான பொது இயக்குனர் கமால் நாசர் கூறுகையில், “புதிய தீர்மானம் டிபிஆர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான சட்டம் நடைமுறைக்கு வரும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு, பயிர்கள் உற்பத்தியில் 20 சதவீத சலுகைகளை விட்டுத்தர வேண்டி இருக்கும்” என்று கூறியுள்ளார்.
எனினும், எதிர்வரும் 20-ம் தேதி, அங்கு புதிய அரசு தலைமை ஏற்க இருப்பதால், முந்தைய அரசின் தீர்மானங்களை புதிய அரசு பின்பற்றுமா என்பது சந்தேகத்திற்கு உரியது என்றும் கூறப்படுகின்றது.
இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் பெரும்பாலான பங்கினை மலேசிய நிறுவனங்கள் வகிக்கின்றன. அவற்றில் ‘கோலாலம்பூர் கேபாங்‘ (KLK), ‘கெந்திங் பிளாண்டேசன்‘ (Genting Plantation) , ‘ஐஜெஎம் பிளாண்டேசன்‘ (IJM Plantation) போன்றவை குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும். புதிய சட்டத்தால் மேற்கூறிய நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது.