சென்னை, அக்டோபர் 1 – மங்காத்தா, தூங்கா நகரம், தகராறு போன்ற வெற்றி படங்களை தயாரித்தவர் தயாநிதி அழகிரி. இவர் இது மட்டுமல்லாமல் தமிழ்படம், வா, வானம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களை விநியோகம் செய்து வெற்றி கண்டவர்.
இவை அனைத்திற்கும் மேல் அழகிரியின் மகன் என்பது தான் இவரின் பெரிய அடையாளம். ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ் திரையுலகத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
இதை விமர்சிக்கும் விதமாக தயாநிதி அழகிரி தன் டுவிட்டர் பக்கத்தில், “இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா?”
“வரி விதிப்பு மற்றும் ‘தலைவா’, ‘விஸ்வரூபம்’ போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்”.
“தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் இங்கு அனைவருக்கும் இருக்கிறது” என்று கிண்டலாகவும், கடுமையாகவும் டுவிட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி.