Home நாடு இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை 20 காசு உயர்வு

இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை 20 காசு உயர்வு

575
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர், அக்டோபர் 2 – இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 20 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலையேற்றம் அமலுக்கு வருகிறது.

இதையடுத்து ரோன் 95 பெட்ரோலின் விலை இனி லிட்டருக்கு 2 ரிங்கிட் 30 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 20 காசாகவும் இருக்கும்.

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியத்தை குறைத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்ததையடுத்து இந்த விலையேற்றம் அமல்படுத்தப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“விலை உயர்த்தப்பட்ட போதிலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு கொள்கலனுக்காக (சிலிண்டருக்கான) மானியமாக இந்தாண்டு அரசு 21 பில்லியன் ரிங்கிட்செலவிட வேண்டியிருக்கும். அரசு வழங்கும் இந்த மானியம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, பொறுப்பற்ற சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் எரிபொருள் கடத்தலை முற்றிலுமாக தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக நிலை நிறுத்தப்படவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், விலையேற்றத்தின் மூலம் மக்களுக்கு ஏற்படக் கூடிய சிரமங்களை உணர்ந்திருப்பதாகவும் பயனீட்டாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

“குறைந்த வருவாய் பிரிவினரின் சுமையைக் குறைக்கும் விதமாக உதவித் தொகைகள் வழங்கப்படும்,” என அமைச்சின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலைகள் 20 காசு உயர்த்தப்பட்டன.