ஷா ஆலம், அக்டோபர் 2 – சிலாங்கூர் மாநில பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அன்வார் இப்ராகிமை முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் நீக்கவில்லை என்றும், ஆலோசகரின் அலுவலகத்தை மட்டுமே மூடியுள்ளார் என்றும் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்தார்.
“சிலாங்கூர் அரசுக்கு மாநில பொருளாதார ஆலோசகரின் சேவையைப் பெறுவது குறித்து தற்போது ஆலோசிக்க உள்ளோம்,” என்றார் அவர்.
இது தொடர்பாக மந்திரி பெசார் கூட்டமைப்பின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபேகா ஹுசின் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், அன்வார் ஆற்றிய பணிக்காக நன்றி தெரிவித்துள்ளார்.
ஆலோசகர் பதவியில் அன்வார் நியமிக்கப்பட்டது முதல் அவரது பணி மற்றும் ஊதியம் தொடர்பில், சிலாங்கூர் அரசு மீது எண்ணற்ற விமர்சனங்களும், புகார்களும் சுமத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
முன்னாள் துணைப் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் அன்வாரின் பொருளாதார மற்றும் நிதித்துறை சார்ந்த நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே மாநில பொருளாதார ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டதாக ஃபேகா ஹுசின் மேலும் கூறியுள்ளார்.
மாநில அரசின் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கும் விதமாக அன்வாரின் அலுவலகத்தை மூடுவது என்ற முடிவு கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டதாக ஃபேகா ஹுசின் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.