புதுடெல்லி, அக்டோபர் 4 : இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக பல மாதங்களுக்கு முன்னால் அறிவிக்கப்பட்ட நாள்முதல், நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து சூழ்ந்திருக்கின்றது என தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.
பிரதமரான பின், அவருக்கான பாதுகாப்பு வளையங்கள் மேலும் இறுக்கமாகியுள்ள நிலையிலும், அவ்வப்போது மோடியைக் குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நிகழலாம் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அவருக்கு மாற்று விமானமாக கொண்டு செல்லப்பட காத்திருப்பில் வைக்கப்பட்டு இருந்த ஏர் இந்தியாவின் விமானத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டை பாதுகாப்பு படையினர் செயல் இழக்க செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குண்டு வைத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்து விட்டு அக்டோபர் 1-ம் தேதி நாடு திரும்பினார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு காத்திருப்பு விமானமாக ஏர் இந்தியாவின் ஜம்போ விமானம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
போயிங் 747-400 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் மும்பை-ஐதராபாத்-ஜெட்டா இடையே இயக்கப்படுவது ஆகும். இந்த விமானம் ஜெட்டாவில் தரை இறங்கிய போது அதில் கிரானெட் எனப்படும் கைவெடிகுண்டு ஒன்று வைக்கப்பட்டு இருந்ததை விமான ஊழியர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ஜெட்டா விமான நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்பட்டு வெடிகுண்டு செயல் இழக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானம் ஜெட்டா நகரிலேயே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணை முடிந்த பிறகு விமானம் இந்திய நகரான கோழிகோட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் விமானத்தில் சந்தேகத்திற்குரிய மர்ம பொருள் இருந்தது என்றும் இது பற்றி விசாரணை நடத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.