Home நாடு துன் சுஹைலா தலைநகர் வீரர்கள் கல்லறையில் நல்லடக்கம்

துன் சுஹைலா தலைநகர் வீரர்கள் கல்லறையில் நல்லடக்கம்

469
0
SHARE
Ad

Tun suhailahகோலாலம்பூர், அக்டோபர் 4 – மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹூசேன் ஓனின் துணைவியாரும், நடப்பு தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓனின் தாயாருமான துன் சுஹைலா இன்று நண்பகலுக்குப் பின்னர் கோலாலம்பூர், வீரர்கள் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை 12.30 மணியளவில் 82 வயதான அவர் காலமானார். பொதுமக்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்துவதற்காக, புக்கிட் துங்குவில் வைக்கப்பட்டிருந்த அவரது நல்லுடல் பின்னர்  இராணுவ வாகனம் ஒன்றின் மூலம் பள்ளிவாசலுக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் நஜிப்பின் தாயார் துன் ராஹா, துன் சுஹைலாவின் இளைய சகோதரியாவார். அவரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு துன் சுஹைலாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பல அமைச்சர்களும், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும், தலைவர்களும் இறுதி மரியாதை சடங்குகளில் கலந்து கொண்டவர்களில் அடங்குவர்.

பகாங் சுல்தான் அகமட் ஷா, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, ஆகியோரும் தங்களின் இறுதி மரியாதையை செலுத்தினர்.

அரசியல் வட்டாரங்களில் மரியாதைக்குரியவராகத் திகழ்ந்த துன் சுஹைலா, தன் கணவரை முன் நிறுத்தி, தான் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டவராவார்.

கணவர் துன் ஹூசேன் ஓனின் மறைவுக்குப் பின்னர் நீண்ட காலமாக, அவர் எந்தவித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை தவிர்த்தே வந்தார்.