பாட்னா, அக்டோபர் 4 – இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் காந்தி மைதானத்தில் நிகழ்ந்த தசரா கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒரு குழந்தை இன்று இறந்ததைத் தொடர்ந்து உயிர்ப் பலியானவர்களின் எண்ணிக்கை இன்றோடு 33 ஆகியுள்ளது.
காயமடைந்த 29 பேரில் 4 பேரில் உடல்நிலை மோசமான நிலைமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 17 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள்.
இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், பாட்னா அரசு மருத்துவமனைக்கு விரைந்த பீகார் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மாநில தலைமை செயலாளர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக விரைவாக விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பீகார் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பீகார் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சியுடன் தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தசரா விழாவில் 33 பேர் பலியான சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
படங்கள் – EPA