இலண்டன், அக்டோபர் 5 – பிரிட்டனைச் சேர்ந்த மேலும் ஒரு தொண்டூழியரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். இச்செயல் காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டிஷ் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்காவும் தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த தொண்டூழியரான ஆலன் ஹென்னிங்கின் தலை துண்டிக்கப்படும் காட்சி வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.
கடந்த டிசம்பர் மாதம் அவர் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்திய தீவிரவாதிகள் அவரைக் கடத்திச் சென்றனர். அவரைக் கொலை செய்யப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். கடந்த வாரம் அறிவித்தது. அவ்வாறு அறிவித்தபடியே 47 வயதான ஆலன் ஹென்னிங்கை கொடூரமாக கொன்றுள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் கண்டனம்
தீவிரவாதிகளின் இச்செயலுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானவர்கள், கோழைகள் என்பது தெரிகிறது. சக மனிதர்களுக்கு உதவி செய்யும் பொருட்டே சிரியா சென்றார் ஆலன் ஹென்னிங். அவரைக் கொன்றவர்களை வேட்டையாடி, நீதியின் முன் நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம்,” என்று டேவிட் கேமரூன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆலன் ஹென்னிங் படுகொலையை அமெரிக்க அதிபரும் கடுமையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஆலன் ஹென்னிங்கை படுகொலை செய்தவர்களை, இங்கிலாந்து மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு நீதியின் முன் நிறுத்துவோம்,” என ஓபாமா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆலன் ஹென்னிங் படுகொலை செய்யப்படும் காணொளி காட்சியின் இறுதியில் தோன்றும் தீவிரவாதி அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு பிணைக் கைதி தங்களிடம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
பீட்டர் எட்வர்ட் காசிங் என்ற 26 வயதான அந்நபர் சிரியாவில் மனிதநேயப் பணிகளுக்காக சென்றபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அமெரிக்காவில் உள்ள அவரது பெற்றோர் உறுதி செய்துள்ளனர்.
ஏற்கெனவே சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க ஊடகவியலாளர்கள் இருவர், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் என 3 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.