மும்பை, அக்டோபர் 5 – ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைஃப் ஜோடி சேர்ந்து நடித்த ‘பேங் பேங்’ இந்தித் திரைப்படம் உலகம் முழுவதும் தற்போது வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.
கடந்த மூன்று தினங்களில் மட்டும் இந்தியாவில் இப்படத்தின் வசூல் ரூ.72 கோடியை கடந்துள்ளது. எனினும் ‘கிக்’ மற்றும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களின் வசூலை ‘பேங் பேங்’கால் முறியடிக்க இயலவில்லை.
‘ஜெய்ஹோ’, ‘கிக்’ மற்றும் ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களையடுத்து இந்தியாவில் மிகப் பிரமாண்டமான முறையில் வெளியிடப்பட்ட படம் ‘பேங் பேங்’.
எனவே இப்படங்களின் வசூல் நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் திரையுலக நிபுணர்கள்.
சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பேங் பேங்’ சுமார் 4500 திரைகளில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூலாக ரூ.27.54 கோடி திரண்டது. எனினும் இரண்டாம் நாள் வசூல் சற்றே குறைந்தது. விடுமுறை நாளாக இருந்தும் சுமார் 15 விழுக்காடு வரை வசூல் குறைந்ததால், இரண்டாவது நாளன்று சுமார் ரூ.24 கோடி மட்டுமே வசூலானதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஃபாக்ஸ் ஸ்டார்’ தெரிவித்துள்ளது.
எனினும் அடுத்து வரும் நாட்களில் வசூல் சூடு பிடிக்கும் என்றும் 4 நாட்களில் 100 கோடியை எட்டிப்பிடிக்கும் என்றும் சினிமா விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
வெளிநாடுகளிலும் இப்படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது. பாகிஸ்தானில் முதல் நாளன்றே ரூ.76.85 வசூலித்ததுள்ளது ‘பேங் பேங்’.
இங்கிலாந்தில் ரூ.1.75 கோடியும், வட அமெரிக்காவில் ரூ.1.63 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.50 லட்சமும் வசூலாகி இருப்பதாக ‘போலிவுட் ஹங்காமா’ செய்தி தெரிவிக்கிறது.
இந்தப் படம் 140 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இலண்டன், பிராக் போன்ற வெளிநாட்டு நகர்களிலும், சிம்லாவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றன.
“பேங் பேங் படத்தின் வெற்றியின் மூலம் எனது முந்தைய சாதனைகளை முறியடித்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதன் வழி எனது வளர்ச்சி மற்றும் பலத்தை உணர முடிகிறது. ரசிகர்களை மகிழ்விக்க முடிந்ததில் மகிழ்ச்சி,” என்று கூறியுள்ளார் பட நாயகன் ஹிருத்திக் ரோஷன்.
தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க ‘பேங் பேங்’ தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.