பெங்களூர், அக்டோபர் 5 – ஐபிஎல் எனப்படும் இந்தியாவின் தனியார் அணிகளுக்குள் நடக்கும் 20:20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் வெற்றியாளர் கிண்ண (சாம்பியன்ஸ் லீக் கோப்பை) இறுதி ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தாவின் அணியைத் தோற்கடித்தது
இந்த இறுதிப் போட்டியில் தொடங்கியது முதல் இறுதி வரை நின்று ஆடிய சுரேஷ் ரெய்னா சதம் அடித்து, சென்னை அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னசாமி அரங்கத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் வெற்றியாளர் கிண்ணத்திற்காக சென்னை சூப்பர் கிங்சும், ஐ.பி.எல். நடப்பு வெற்றியாளர் கொல்கத்தா நைட் ரைடர்சும் களத்தில் இறங்கின.
முதலில் சென்னை அணியினர் பந்து வீசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டம் எடுத்தது.
அதன் பின்னர் இரண்டாவது பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியினர் பந்து வீச ஆரம்பித்தனர்.
181 ஓட்டம் எடுப்பதை இலக்காகக் கொண்டு விளையாடத் தொடங்கிய சென்னை அணியினர், ரெய்னா, மெக்கல்லாம் இருவரின் அபார ஆட்டத்தினால், 127 ஓட்டம் வரை எடுத்தனர். அப்போது மெக்கல்லம் ஆட்டம் இழக்க, தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) டோனி அதன் பின்னர் களமிறங்கி, இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடினார்.
ஏராளமான சிக்சர்கள் அடித்து ரெய்னா, 100 ஆட்டங்களைத் தாண்டி ஓட்டம் எடுத்தார்.
வெற்றியாளர் கிண்ணத்தை இரண்டாவது முறையாக சென்னை வென்றுள்ளது.
வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.15 கோடியும், 2-வது இடத்தை பிடித்த கொல்கத்தாவுக்கு ரூ. 8 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.