Home அவசியம் படிக்க வேண்டியவை மலேசியாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படம் வெளியீடு

மலேசியாவில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவணப் படம் வெளியீடு

785
0
SHARE
Ad

Pattukottai Documentary Cover 600 x 400பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 5 – குறுகிய காலமே திரைப்பாடல் கவிஞராக தமிழ்த் திரையுலகில் இயங்கினாலும், தான் கட்டிய பாட்டுக் கோட்டையால் இன்றுவரை தமிழர்களின் மனக் கோட்டைகளில் வலம் வந்து கொண்டிருப்பவர் மக்கள் கவிஞர் எனப் போற்றப்படும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை ஊருக்கே இன்றுவரை விலாசமாகத் திகழுபவர். பட்டுக்கோட்டையார் என்றாலே அது கல்யாணசுந்தரம் என்னும் அளவுக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் தனது ஆளுமையால் புகழ் பெற்றவர்.

பட்டுக்கோட்டையாரின் ஆவணப் படம்

#TamilSchoolmychoice

அவரைப் பற்றியும் அவர் வாழ்ந்த வாழ்க்கை பற்றியும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பு. சாரோன் எட்டாண்டுகால ஆராய்ச்சிகள், தேடலுக்குப் பின்னர் பட்டுக்கோட்டையாருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் இரண்டரை மணி நேர ஆவணப் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

அந்த ஆவணப் படம் ஏற்கனவே தமிழகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த ஆவணப் படத்தின் மலேசிய வெளியீடு இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களோடு கூடிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தனது ஆவணப் படத்தின் மலேசிய வெளியீட்டு விழாவில் தமிழகத்தில் இருந்து வந்து, தனது தாயாருடன் கலந்து கொண்ட சாரோன், தான் ஏன் இந்த ஆவணப் படத்தை எடுக்க நேர்ந்தது என்பது குறித்து உணர்ச்சிகரமான உரையொன்றை வழங்கினார்.

பட்டுக்கோட்டையாரின் பின்புலத்தையும், அவர் பாட்டு எழுத வந்த சூழ்நிலைகள், எவ்வாறு இளம் வயதிலேயே, திரையுலகில் பல பெரிய திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு மத்தியில் வெற்றிக் கொடி நாட்டினார் என்பது குறித்தும் சாரோன் விவரமாக எடுத்துரைத்தார்.

எம்.ஜி.ஆரின் வெற்றிக்குப் பின்னணியில் பட்டுக்கோட்டையார்…

MGR எம்.ஜி.ஆர் என்ற நடிகர் தமிழகத்தில் ஒரு தலைவராகவும், பின்னர் முதல்வராகவும் வெற்றிகரமாக உலா வந்ததற்கு பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பேருதவி புரிந்தன என்பது சரித்திரபூர்வ ஆதாரம் என்றும் சாரோன் எடுத்துரைத்தார்.

எம்ஜிஆர் முதல்வராகப் பதவியேற்றதும் அளித்த பேட்டியில், இன்று நான் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலிக்கு இருக்கும் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்த நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று எம்ஜிஆர் கூறியிருந்ததை சாரோன் தனது உரையில் நினைவு கூர்ந்தார்.

அவர் எடுத்த ஆவணப் படத்தின் சில காட்சிகளும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டன.

பர்வீன் சுல்தானாவின் இலக்கிய உரை

தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கென சிறப்பு வருகை புரிந்திருந்த இலக்கியப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் குறித்தும், பாரதி மற்றும் பாரதிதாசன் மீது பட்டுக்கோட்டையார் வைத்திருந்த அபிமானம், மரியாதை குறித்தும் இலக்கிய நயத்தோடு விவரித்தார்.

ஏறத்தாழ 300 பேர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆவணப் பட வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பித்தனர்.