Home One Line P1 பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி

பட்டுக்கோட்டையார் நினைவலைகள் : பொதுவுடமைப் பாட்டுகளின் சிற்பி

987
0
SHARE
Ad

(இன்று அக்டோபர் 8, மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள். 1958-ஆம் ஆண்டில் இதே தேதியில் நம்மை விட்டுப் பிரிந்தார் பட்டுக்கோட்டையார். 62 ஆண்டுகளைக் கடந்து அன்னாரின் பாட்டுகளும் கவிதைகளும் இன்றும் உயிரோட்டமாக நம்மிடையே நிலைத்து நிற்கின்றன. மேற்கோள் காட்டப்படுகின்றன. தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத பக்கங்களாகவும் பதிந்து விட்டவை அவரது கவிதைகள். அவரை நினைவு கூரும் இந்தக் கட்டுரையை மலேசிய எழுத்தாளர் நக்கீரன் படைத்துள்ளார்)

எளிய வாழ்வின் சின்னமான தோழர் ப.ஜீவானந்தமும் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாண சுந்தரமும் ஒருமுறை சென்னையில் பயணம் மேற்கொண்டிருந்த பொழுது சாலையில் குழி தோண்டப்பட்டு, அங்கு சீரமைப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் அடையாளமாகவும் பயணிகளை எச்சரிக்கும் விதமாகவும் அங்கு சிவப்பு கொடி பறக்கவிடப்பட்டதாம்.

இருவருமே பொதுவுடைமை சிந்தனையாளர்கள். இதைப் பார்த்த பட்டுக்கோட்டையார், ஜீவாவிடம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டத்தான் பொதுவுடைமைக் கட்சியினர் சிவப்புக் கொடியைப்  பறக்க விடுகின்றனர் என்றால், சாலையில் இருக்கும் மேடு பள்ளத்தைக் காட்டவும் சிவப்புக் கொடியைப் பறக்க விடுகின்றனர். மொத்தத்தில் எங்கெல்லாம் ஏற்றத்தாழ்வு நிலவுகிறதோ அங்கெல்லாம் சிவப்பு கொடி பறக்கும் போலும் என்று சொன்னதும் ஜீவானந்தம் இரசித்துச் சிரித்தாராம்.

#TamilSchoolmychoice

‘உழைக்காமல் உண்ண எத்தனிப்பது ஏய்த்துப் பிழைப்பதற்கு சமம். உழைக்க வேண்டும். அதுவும் கூட்டாக உழைக்க வேண்டும். விளையும் நன்மையை எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்னும் பொதுவுடைமை (கம்யூனிச)க் கொள்கையைக் கொண்டவர் பட்டுக்கோட்டையார். இந்த சிந்தனையைச் சிந்தாமல் சிதறாமல் 1958-இல் வெளிவந்த அரசிளங்குமரி என்ற திரைப்படத்திற்கு எழுதிய பாடலில் கீழ்க்காணுமாறு வரிகளைப் பாங்குற அமைத்தார்:

ஏற்றமுன்னா ஏற்றம்

இதிலேயிருக்குது முன்னேற்றம்

எல்லோரும் பாடுபட்டா – இது

இன்பம் விளையும் தோட்டம்..

29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இந்த பாமகன், தமது 28-ஆவது வயதில் இயற்றிய முத்தான வரிகள்தான் இவை.


மேலும் படிக்க: “தமிழ்ச் சமூகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும்” – வைரமுத்து


எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடல் ஆசிரியர். தமிழகம் தஞ்சை பெருமண்டலத்தில் பட்டுக்கோட்டை பட்டணத்திற்கு அருகே சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் எளிய விவசாய குடும்பத்தினரான அருணாச்சலனார்-விசாலாட்சி அம்மையார் தம்பதியருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார் பட்டுக்கோட்டையார்.

விவசாயி, மாட்டுக்காரர், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, தென்னங்கீற்று வியாபாரி, மீன்-நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, இயந்திர இயக்குநர், தண்ணீர் வண்டிக்காரர், அரசியல்வாதி, பாடகர், மேடை நாடக நடிகர், பத்திரிகை துணை ஆசிரியர், நடனக்காரர், கவிஞர் என்றெல்லாம் பல பரிமாணங்களை அடுத்தடுத்துப் பெற்று, இளம் பருவத்திலேயே வறுமையையும் பசியையும் அனுபவித்த பட்டுக்கோட்டையார், முதலாளித்துவத்தையும் தொலைவில் இருந்தே அவதானித்தார்.

பள்ளிப்படிப்பு இல்லை; திண்ணைக் கல்வியை இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே பெற்ற கல்யாணசுந்தரம், 1952-இல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார். அந்த வாய்ப்பைப் போற்றும் விதமாக பட்டுக்கோட்டையார் தன் மனைவிக்குக் கடிதம் எழுதும்போது தனக்குத் தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுத்தான் தொடருவாராம்.

இவரின் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். திராவிட இயக்கத்திலும்,  பொதுவுடைமைக் கொள்கையிலும்  ஈடுபாடு கொண்டிருந்தார். பத்தொன்பதாவது வயதிலேயே  கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்.

இவருடைய பாடல்கள் பாரம்பரிய கிராமியப் பண் முறையைத் தழுவியவை. பாடல்களில் உருவத்தைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். குறையை சுட்டிக் காட்டிய அதேவேளை, அதற்கான தீர்வையும் தர்க்க ரீதியாக சுட்டிக்காட்டிய தீர்க்கதரிசியான பட்டுக்கோட்டையார், 29 ஆண்டுகளுக்குள் தன் வாழ்வை முடித்துக் கொண்டது தமிழ் இனத்திற்கும் இலக்கியத்திற்கும் பெரு நட்டம்.

சமுதாயத்தின் அனைத்து மட்டத்திலும் நிலவிய நிறைவான தன்மையையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசை, ஆவேசம் இரண்டையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திய பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார், 1955ஆம் ஆண்டு “படித்த பெண்” திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றியதன்வழி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரையை முதல் முதலாகப் பதித்தார்.

திரைப்பட உலகிற்காக 180 பாடல்களைத்தான் இவர் எழுதினார் என்றாலும் அவற்றில் பல காலத்தால் அழியாதவை. அவர், தமிழுலகைப் பிரிந்து அறுபது ஆண்டுகள் ஆன பின்னும் அவை இன்னமும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்நிலை தொடரும். 1959-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் அவருக்கு ‘மக்கள் கவிஞர்’ என்று அளித்த பட்டம் மிகப் பொருத்தமாய் நிலைத்து விட்டது.

அதே ஆண்டு இதே நாளில் (அக்.08) கலியாண சுந்தரனார் இயற்கை எய்தினார்.

தொடர்ந்து அவர் பல்வேறு தளங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டில் பட்டுக்கோட்டையார் குறித்த ஆவணப் படம் காணொலியாக மலேசியாவில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்க பட்டுக்கோட்டையார் புகழ்!

-நக்கீரன்