Home நாடு பட்டுக்கோட்டையாரை ஆவணப்படுத்திய பு.சாரோனுடன் காணொளி நேர்காணல்!

பட்டுக்கோட்டையாரை ஆவணப்படுத்திய பு.சாரோனுடன் காணொளி நேர்காணல்!

1282
0
SHARE
Ad

Saronகோலாலம்பூர், நவம்பர் 4 – தமிழ்த் திரையுலகளில் 1950ஆம் ஆண்டுகளின் இறுதிப் பகுதியில் மிக இளம் வயதில் நுழைந்து திரைப்படப் பாடல்களைப் புனைவதில் புரட்சி செய்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

நாளடைவில் பட்டுக்கோட்டையார் என்றால் அது கல்யாணசுந்தரம்தான் என்னும் அளவுக்கு தமிழ் திரைப்படப் பாடல் துறையில் அழுத்தமான, இன்றுவரை இரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு ஆழமான  முத்திரையைப் பதித்தவர் பட்டுக்கோட்டையார்.

ஆனால், 29வது வயதிலேயே அகால மரணமடைந்து இன்றுவரை அவர் விட்டுச் சென்றது வெற்றிடமாகவே இருக்கின்றது என அனைவராலும் ஒருமுகமான பாராட்டைப் பெற்றவர். அவருக்குப் பின் எத்தனையோ சிறந்த கவிஞர்கள் வந்தாலும், பட்டுக்கோட்டையாரின் ஆளுமையும், சிறப்பியல்புகளும் இன்றும் மக்களிடையையேயும், மேடைப் பேச்சுக்களிலும் மையமாக நிலைத்து நிற்கின்றது.

#TamilSchoolmychoice

பட்டுக்கோட்டையார் இருந்தால், கண்ணதாசனால் பிரகாசித்திருக்க முடியுமா, இருவருக்கும் இடையிலான போட்டி எப்படி இருந்திருக்கும் என்பது போன்ற விவாதங்கள் இன்றைக்கும் தொடர்கின்றன.

அவரது மரணத்திற்குப் பின்னர், 50 ஆண்டுகள் பட்டுக்கோட்டையாரின் திறமையாலும், பின்புலத்தாலும் அவரது வாழ்க்கைச் சம்பவங்களாலும் கவரப்பட்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர், அலைந்து திரிந்து, சுமார் எட்டாண்டுகள் கடுமையாக உழைத்து, அவரைப் பற்றிய ஆவணப் படம் ஒன்றை உருவாக்கி மகத்தான சரித்திரப் பதிவொன்றை நிகழ்த்தியிருக்கின்றார்.

அவர் தான் புதுமையான பெயர் கொண்ட பு.சாரோன் (படம்).

பட்டுக்கோட்டையாரின் ஆவணப்படம் 

தமிழகத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் ஆவணப்படம் இந்தியாவிற்கு வெளியே வெளியிடப்படும் முதல் நாடாக மலேசியா திகழ்கின்றது. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தோட்ட மாளிகையில் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவில் அதன் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது.

அந்த நிகழ்வுக்காக மலேசியா வந்திருந்த இந்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் பு.சாரோன், மற்றும் இந்த ஆவணத் தயாரிப்பில் அவருக்குத் துணை நின்ற மேடைப் பேச்சுகளால் பிரபலமான பர்வீன் சுல்தான் ஆகியோரோடு நேர்காணல் ஒன்றை செல்லியல் நடத்தியது.

பு.சாரோனுடனான காணொளி வடிவிலான நேர்காணலை வாசகர்களுக்காக இங்கே வழங்கியிருக்கின்றோம். பர்வீன் சுல்தானுடனான காணொளி வடிவ நேர்காணல் தனியாக இடம் பெறும்.

பு.சாரோன் செல்லியலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்த சில முக்கிய அம்சங்களை சுருக்கமாக இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.

எப்படி உருவானது ஆவணப் படம்?

பு.சாரோன்: பட்டுக்கோட்டையாரின் பாடல்களை இளவயதில் எனது தந்தையார் என்னைத் தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டுப் பாடல்களைப் போல பாடிக் காட்டுவார். அப்போது மனதில் பதிந்தவை அவரது பாடல்கள்.

பின்னர், பட்டுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றபோது, பட்டுக்கோட்டையாரின் இல்லம் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு அங்கு சென்றேன். அங்கு அவரது மனைவியைச் சந்தித்தேன். அப்போதுதான் அவரைப் பற்றிய முறையான ஆவணங்கள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே இருக்கின்றது என்பதை உணர்ந்து, அவரைப் பற்றிய ஆவணப் படத்தை உருவாக்கும் பணியில் இறங்கினேன்.

ஆனால், அந்த பணியும், பயணமும் முழுமையடைய எனக்கு எட்டாண்டுகள் பிடித்தது. இலட்சக்கணக்கான ரூபாய் பணம் செலவானது.

சொற்ப குறிப்புக்களைக் கொண்டு, 180 மணி நேரம் ஒளிப்பதிவு

55 ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்துவிட்ட கல்யாணசுந்தரம் குறித்த வெகு சில ஆவணங்களே இன்றைக்கு எஞ்சியிருக்கின்றன. சாரோனுக்குக் கிடைத்தது ஏழே ஏழு புகைப்படங்கள்தான்.

அவற்றைக்கொண்டு பட்டுக்கோட்டையாரோடு பழகிய மனிதர்கள் என தேடித் தேடி அலைந்து சுமார் 180 மணி நேரம் இந்த ஆவணப் படம் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றது. அதனைச் சுருக்கி குறுந்தட்டு வடிவில் இரண்டரை மணிநேர படமாக வெளியிட்டிருக்கின்றார்கள்.

ஓவியத்தால் உயிர்கொண்ட சம்பவங்கள்

சாரோனின் முயற்சி செயலாக்கம் பெற முக்கிய பங்காற்றியிருப்பவர் பட்டுக்கோட்டையாரோடு நெருங்கிப் பழகிய ராமச்சந்திரன் என்ற ஓவியர். ஆவணப் படமும் இந்த ஓவியரின் பார்வையிலேயேதான் நகர்கின்றது.

புகைப்படங்களாக கிடைக்காத சம்பவங்களை, தனது நினைவாற்றலைக் கொண்டு ஓவியங்களாகத் தீட்டித் தந்திருக்கின்றார் ராமச்சந்திரன். இந்த ஆவணப் படத்தின் முக்கியமான வித்தியாச அம்சமாகத் திகழ்வது ராமச்சந்திரனின் பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தத்ரூபமாக சித்தரிக்கும் ராமச்சந்திரனின் ஓவியங்கள்தான்.

எம்ஜிஆரின் இமாலய உருவாக்கத்திற்கு அடித்தளம் பட்டுக்கோட்டையார்

எம்ஜிஆர் தமிழக முதல்வரானப் பின்னர் வழங்கிய ஒரு பேட்டியில் “எனது முதல்வர் நாற்காலிக்கு இருக்கும் நான்கு கால்களில் மூன்று கால்கள் எதனால் ஆனவை என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் காலாகும்” என மனம் திறந்து கூறியிருக்கின்றார்.

எம்ஜிஆர் திரைப்படத்தில் மேற்கொண்ட பொதுவுடமைக் கொள்கைகள், மக்கள் நலன் பிரச்சாரங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்தான், அந்த வழியை எம்ஜிஆர் தேர்ந்தெடுக்க பாதை அமைத்துத் தந்ததும் பட்டுக்கோட்டையார்தான் என்பது சரித்திரபூர்வமான உண்மை என்கின்றார் சாரோன்.

தனக்கு மட்டுமே அவர் பாடல் எழுத வேண்டும் என எம்ஜிஆர் நினைக்கும் அளவுக்கு அவரைப் பாதித்தவர் பட்டுக்கோட்டையார்.

சில பதிவுகளை காட்சிப்படுத்தவில்லை

தனது சந்திப்புகளில் மறக்க முடியாதது, வீராச்சாமி என்ற நடிகருடன் நடத்தப்பட்ட பேட்டி என்கிறார் சாரோன். சிவாஜி கணேசன் நடித்த “முதல் மரியாதை” படத்தில் “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் தாயி” எனப் பேசி நடிப்பாரே அவர்தான் அந்த வீராச்சாரி.

உருக்குலைந்து, ஓர் ஒண்டுக் குடித்தனத்தில், போதிய வெளிச்சமில்லாத ஓர் அறையில் இருந்த அவர் பட்டுக்கோட்டையாரோடு பழகியவர் என்று அறிந்து அவரைப் பார்க்கச் சென்றபோது, “நான் சாப்பிட்டு மூன்று நாளாச்சு எனக்கு கொஞ்சம் சாப்பாடு வாங்கித் தரீங்களா?” என அவர் கேட்டது தனக்கு பகீர் உணர்வைத் தந்து, கண்ணீரை வரவழைத்த காட்சி என்கிறார் சாரோன்.

வீராச்சாமியைச் சந்தித்த ஒரு வாரத்திற்குப் பின்னர், அவர் மரணமடைந்துவிட்டார் என்பது மற்றொரு சோக நெருடல்.

கண் முன்னே அழிந்த சரித்திரத் தடயங்கள்

இன்று சாரோனின் ஆவணப் படத்தைப் பார்க்கும் போது அதில் பட்டுக் கோட்டையாரைப் பற்றி தகவல்கள் கூறிய பல மனிதர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டதைக் காண முடிகின்றது.

“மனிதர்கள் மட்டுமல்ல! நான் சென்று பார்த்த சில இடங்களும் காலப்போக்கில் அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. பட்டுக்கோட்டையார் நாடகம் நடத்தியது மதுரை தங்கம் திரையரங்கம் என்றறிந்து அதனைப் படம் பிடித்தேன். படம் பிடித்த சில மாதங்களில் புதிய கட்டிடத்திற்காக ஆசியாவிலேயே பெரிய அந்த திரையரங்கம் இடிக்கப்பட்டது. பட்டுக்கோட்டையாரைப் பற்றி சொல்வதற்காக காத்திருந்தேன் என்பது போல் என்னிடம் நேர்காணலில் அவரைப் பற்றிய தகவல்கள் கூறி முடித்த சில மாதங்களில், அல்லது ஆவணப் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அந்த மனிதர்கள் உலகத்தை விட்டை மறைந்தார்கள்” என வருத்தமும், ஆச்சரியமும் கலந்த தொனியில் கூறுகின்றார் சாரோன்.

இளையராஜா – எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து வெளியிட்ட ஆவணப்படம்

சாரோனின் ஆவணப்படத்தை இசையமைப்பாளர்கள் இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் கடந்த மே 14ஆம் தேதி சென்னையில் வெளியிட்டிருக்கின்றார்கள்.

அதன் பின்னர், இரண்டாவது வெளியீடு செப்டம்பர் 23ஆம் தேதி பட்டுக் கோட்டையில் நடந்தேறியபோது திரைப்பட இயக்குநர் பாக்கியராஜ் முன்னிலை வகித்திருக்கின்றார். அந்த பட்டுக்கோட்டை வெளியீட்டு விழாவில் அதுவரையில் எங்கும் வராமல் இருந்த பட்டுக்கோட்டையாரின் மனைவி, தனது 55 ஆண்டுகால மௌனத்தை உடைத்து சுமார் 15 நிமிடங்கள் மேடையில் பட்டுக்கோட்டையாருடனான தனது வாழ்க்கையைப் பற்றிப் பேசியது நெகிழ்வான, மறக்க முடியாத தருணம் என்றும் நமது நேர்காணலில் சாரோன் குறிப்பிட்டார்.

துதிபாடாத படம் இனி மற்ற நாடுகளில்….

சாரோனின் ஆவணப் படம் பட்டுக்கோட்டையாரின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி கூறுகின்றதே தவிர, மற்றபடி வேண்டுமென்றே அவரது புகழ்பாடும் இணைப்புகள் இல்லை. “பட்டுக்கோட்டையாரோடு நேரடி தொடர்பு கொண்டவர்கள், பரிச்சயம் கொண்டவர்கள் மட்டுமே ஆவணப்படத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்” என்கின்றார் சாரோன்.

இனி அடுத்தடுத்து துபாய், சிங்கப்பூர் போன்ற மற்ற நாடுகளில் இந்த ஆவணப் படத்தை வெளியிடும் திட்டம் இருப்பதாகவும் சாரோன் தெரிவிக்கின்றார்.

ஆவணப் படம் தயாரிப்பு பற்றியும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குறித்தும் பு.சாரோன் கூறும் மற்ற சுவாரசியமான விவரங்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் கண்டு மகிழலாம்.

-இரா.முத்தரசன்

-புகைப்படங்கள்/காணொளி வடிவம்: ஃபீனிக்ஸ்தாசன்

 

பேராசிரியர் பு.சாரோன் நேர்காணல் பகுதி 1 

 பேராசிரியர் பு.சாரோன் நேர்காணல் பகுதி 2