புத்ரா ஜெயா, நவம்பர் 5 – அன்வார் இப்ராகிமின் ஓரினச் சேர்க்கை வழக்கின் மேல் முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் நேற்றோடு ஏழாவது நாளை கடந்திருக்கும் நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு வெளியே டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று நீதிமன்றத்திலிருந்து தனது துணைவியாரோடு வெளியேறும் அன்வார் இப்ராகிம்
தம்மால் ஆட்சியாளர்களுக்கு அரசியல் ரீதியாக இனி எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என்கிற நிலை ஏற்பட்டால் ஓரினச் சேர்க்கை வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசுத் தரப்பு வாதங்களின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அரசுத் தரப்பை வழிநடத்தும் தனியார் வழக்கறிஞரான டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, வழக்கு விசாரணையை ஓர் அரசியல் சொற்பொழிவாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்ட அன்வார், குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் ஆஜராகும் சாட்சிகள் மீது அரசுத் தரப்பு தனிப்பட்ட வகையில் தாக்குதல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
“நான் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் அவர்கள் என்னை விடுதலை செய்யக்கூடும்,” என்று நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார் அன்வார்.
படம்: EPA