புதுடெல்லி, நவம்பர் 5 – மக்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் பிரச்சனையை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி யோசனைகளை வரவேற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ஒலிபரப்பான ‘மனதில் தோன்றியது’ என்ற நிகழ்ச்சியில் மோடி இந்தப் பிரச்சனையை தொட்டிருந்தார்.
இந்நிலையில் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மனதில் தோன்றியது நிகழ்ச்சிக்காக வந்த கடிதங்களில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பிரச்சனை குறித்து நான் அடுத்த நிகழ்ச்சியில் பேசுவதாக கூறினேன்.”
“இந்தக் கொடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். எனது மைகவ் (MyGov) இணையத்தளத்தில் இவற்றை நீங்கள் தெரிவிக்கலாம்.”
“போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் அனுபவங்களை குறிப்பிடலாம்” என்று கூறியுள்ளார்.
‘மனதில் தோன்றியது’ அடுத்த நிகழ்ச்சியில் சமூகப் பிரச்சனைகள் குறித்து பேசுவதாக மோடி கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி இம் மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒலிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.