Home One Line P2 “பூச்சாண்டி” : புதிய மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம்

“பூச்சாண்டி” : புதிய மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் முன்னோட்டம்

1077
0
SHARE
Ad
ஜே.கே.விக்கி

கோலாலம்பூர் : மலேசியாவில் அதிகமான அளவில் உள்ளூர் தமிழ்ப் படங்கள் உருவாகி வெளியிடப்பட்டு வரும் நிலையில் “பூச்சாண்டி” என்ற புதியதொரு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வலம் வரவிருக்கிறது.

அண்மையில் நியூ சென்ட்ரல் (NU SENTRAL) திரையரங்கில், ‘பூச்சாண்டி’ எனும் மலேசிய தமிழ் திரைப்படத்தின் ‘பூச்சாண்டி வரான்’ இசை காணொளி மற்றும் திரைப்படத்தின் முன்னோட்ட  வெளியீட்டு விழா நடைபெற்றது.

இத்திரைப்படத்தை டிரியூம் ஸ்டுடியோ (TRIUM STUDIO PVT LTD) நிறுவனத்தின் எஸ். எண்டி (ANDY) தயாரிக்க, ஜே. கே. விக்கி இயக்கியிருக்கிறார். ‘பூச்சாண்டி’ திரைப்படத்தின் விளம்பரப் பாடலான இது உலகத் தமிழ் ஹிப் பாப் இசையின் முன்னோடியும், நம் நாட்டின் இசையுலக நாயகர்களில் ஒருவருமான யோகி.பி அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

எந்திரனும் மனிதனும் இணைந்து பயணம் செய்யும் புதிய உலகத்திலிருந்து தற்போதைய உலகிற்கு வரும் ஒரு நவீன யோகியின் உணர்தல் நிலையே இப்பாடலின் கருப்பொருளாகும்.

இயக்குனர் ஜே.கே. விக்கியின் கற்பனையில் உருவான இப்பாடலை ஆஸ்ட்ரோ வானவில் சூப்பர் ஸ்டார் பாடல் திறன் போட்டியின் வெற்றியாளரான கணேசன் மனோகரன் இசையமைத்து பாடியுள்ளார்.

மலேசியாவிலேயே முதன் முறையாக சைபர் பங்க் (Cyberpunk) எனும் கருத்துப்படிவத்தில் காட்சியமைக்கப்பட முதல் தமிழ் பாடல் காணொளியான இதில் டி.என்.எக்ஸ் (DNX) நடனக் கலைஞர்கள் துடிப்புமிக்க நடனத்தை  வழங்கியுள்ளனர்.

பொதுவாகவே குழந்தைகளை பயமுறுத்தும் ஒருத்தனாகவும், சமுதாயத் தோற்றத்தில் வேறுபட்டுத் திரிபவனாகவே பூச்சாண்டி எனும் கதாப்பாத்திரம்  சித்தரிக்கப்படும். ஆனால், இப்பாடல் பூச்சாண்டி என்பவன் நம்முடைய பொதுவான கருத்துக்கு அப்பாற்பட்டவன் என்றும், சிவனுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு  யோகி என்பதைக் காட்சியாகவும் பாடல் வரிகள் மூலமும் உணர்த்த விழைந்துள்ளது.

மலேசியாவில் திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ‘பூச்சாண்டி’ திரைக்காணவிருக்கிறது.

மலேசிய தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே தீபாவளிக்கு திரைக்காணும் முதல் மலேசியத் தமிழ் திரைப்படமும் இதுவே.

திகில் – மர்மம் நிறைந்த இத்திரைப்படத்தின் சுவரொட்டியை (POSTER) ‘பேட்ட’ திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பூச்சாண்டி கதைச்சுருக்கம்

ஒரு திகில் கதை பத்திரிகையாளரான இந்தியாவை சேர்ந்த முருகன் என்பவர் (ஆர்.ஜே. ரமணா), தனித்துவமான மற்றும் அமானுஷ்ய கதைகளை சேகரிக்க மலேசியா வருகிறார். தன்னுடைய வேலைக்கான கதை தேடலாகத் தொடங்கிய முருகனின் பயணம் ஷங்கரைச் சந்திக்கும் போது மர்மமாக மாறுகிறது. அதன் பின்னே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே ‘பூச்சாண்டி’.

லோகன், தினேஸ் சாரதி, கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள் மற்றும் இந்தியாவின் முன்னனி வானொலி நிலையமான மிர்ச்சி.எஃ.எம் (MIRCHI.FM) சேர்ந்த அறிவிப்பாளார் ரமனா ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் ஜே. கே விக்கி

2006-ஆம் ஆண்டில் மலேசிய பல்லூடக பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் அனிமேஷன் துறையில் ஜே. கே. விக்கி பட்டம் பெற்றவராவார்.

படத்தொகுப்பாளராகத் தமது பணியைத் தொடங்கி, சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவற்றில் அனுபவம் கொண்ட விக்கி, மலேசியாவில் பல வியக்கத்தக்க படைப்புகளையும் படைத்துள்ளார். அதில் நடுவன், எந்தன் அம்மா, பாடகன் போன்ற இசை காணொளிகள் குறிப்பிடத்தக்கது. 2013-ஆம் ஆண்டு சிறந்த பாடல் காணொலியாக Anugerah Industri Music (AIM) –இல் இவரது காணொலி விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கலைத் துறையைத் தவிர்த்து, இந்திய சமூதாயத்திற்கு பல பயனுள்ள தகவல்களை வழங்கும் விதமாக, நாடு முழுவதும் பல கருத்தரங்குகள் மற்றும் பல முகாம்களை அவர் வழிநடத்தியுள்ளார்.

“பூச்சாண்டி” படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: