Home Featured கலையுலகம் “தமிழ்ச் சமூகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும்” – வைரமுத்து

“தமிழ்ச் சமூகம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும்” – வைரமுத்து

2196
0
SHARE
Ad

சென்னை – (1930ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பிறந்தவர் மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆவார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு கவிப் பேரரசு வைரமுத்துவின் கைவண்ணத்தில் மலர்ந்த இந்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்)

vairamuthu9-600சென்னை –  இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு லட்சத்து முப்பதாயிரம்தான் அவன் ஈட்டிய ஊதியம்.

ஆனால் திரைவெளியில் அவன் பிடித்த இடம் இன்னொருவரால் எட்டப்பட முடியாதது; பாட்டுப் பயணத்தில் அவன் பதித்த தடம் காலப்புழுதியால் அழிக்கப்படாதது.

#TamilSchoolmychoice

1930 இல் ஒரு வேளாளன் வீட்டில் விவசாய வெளிகளில் அவன் பெற்றெடுக்கப் படுகிறான். பட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் அரசாங்க ஆவணங்களில் கூட எழுத்துப் பிழையில்லாமல் எழுதமுடியாத ‘செங்கப்படுத்தான்காடு’ அவன் பிறப்பூர் ஆகிறது. அவன் ‘குவா குவா’ சொல்லிவிழுந்த அடுத்த ஆண்டில்தான் தமிழ் சினிமா பேசவே தொடங்குகிறது.

அவன் திரைப்பாட்டு எழுதவந்த 24 ஆண்டுகளுக்குள் புராணம் – இதிகாசம்-சரித்திரம் – சுதந்திரப் போராட்டம் என்ற கலையின் கச்சாப் பொருள்களையெல்லாம் செலவழித்துத் தீர்த்துவிட்டு சமூக எதார்த்தம் என்ற தளத்தில் வந்து நிலைகொள்கிறது திரைப்படத்தேர்.

pattukottai-kalyanasundaram-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்…

1954 இல் அந்தப் பாமரப் பாவலன் பாட்டெழுத வந்து விட்டான். அதுவரைக்கும் கேட்காத தொனியில் உழைக்கும் மக்களின் முரட்டு மொழியில் திடீரென்று வந்து மிரட்டுகிறது அவன் பாட்டு.

அன்று ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த உடுமலை நாராயணகவியும் தஞ்சை ராமையாதாசும் தங்கள் உணவுமேஜையில் பட்டுக்கோட்டையைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்குச் சில மாதங்களிலேயே அவன் பரபரவென்று பரவுகிறான்.

கேட்ட சொற்கள்; கேளாத பொருள். சந்தம் பழையது; சக்தி புதியது. பல்லவி எழுதமட்டும் தாமதம் செய்கிறான். பிறகு கோடைமழையாய்க் கொட்டிவிடுகிறான். படிக்காத பயலுக்கு எப்படி வந்தது இந்தப் பாட்டு வெறி? திரையுலகம் திகைக்கிறது

வேளாண்வெளிகள் தந்த பட்டறிவு – பாவேந்தர் தந்த மொழியறிவு – கம்யூனிசம் கற்பித்த கருத்தறிவு – இந்த மூன்றையும் உள்வாங்கி எரிந்த அவனது உயிர்ச்சுடர்.

நானறிந்தவரை இந்த நான்கு பொருள்களே பட்டுக்கோட்டையின் முதலும் மூலமும்.

பாட்டெழுத வருவதற்கு முன்பு அவன் பார்த்த தொழில்கள் பதினேழு என்கிறார் ஜீவா.

விவசாயி – மாடுமேய்ப்பவன் – மாட்டுவியாபாரி – மாம்பழ வியாபாரி – இட்லி வியாபாரி – முறுக்கு வியாபாரி – தேங்காய் வியாபாரி – கீற்று வியாபாரி – மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி – உப்பளத் தொழிலாளி – எந்திர ஓட்டுநர்- தண்ணி வண்டிக்காரன் – அரசியல்வாதி – பாடகன் – நடிகன் – நடனக்காரன்- கவிஞன்.

வாழ்வியல் கூறுகளையும் வர்க்க அடுக்குகளையும் அவன் பார்த்த 17 தொழில்களும் பாடம் புகட்டியிருக்கக்கூடும்.

Bharathidhaasanபாவேந்தர் என்ற வேடந்தாங்கலில் இந்தப் பட்டுக்கோட்டை என்ற பாட்டுப்  பறவையும் பாடிப்பாடிப் பழகியிருக்கக் கூடும்.

“ஏ ஆம்பளப்பயல்களா! இங்க பாருங்க ஒரு பொண்ணு என்ன போடு போட்டுருக்கான்னு” பாவேந்தர் ஒரு கவிதைத் தாளெடுத்துத் தன் மாணவர்களுக்கு நீட்டுகிறார். படித்தவர்கள் வியக்கிறார்கள். இயற்றியவர் பெயர் ‘அகல்யா’ என்றிருக்கிறது. அங்கிருந்த கல்யாண சுந்தரம் தனக்குள் சிரித்துக் கொள்கிறான். அருணாசலம் பிள்ளை மகன் கல்யாணசுந்தரம்தான் தன் பெயரை ‘அகல்யா’ என்று பெண்படுத்தியிருக்கிறான். முளைவிடும் போதே பாவேந்தரால் பாராட்டப் பெற்றதில் விண்ணோக்கி வளரவேண்டும் என்ற வெறி விளைந்திருக்கக் கூடும்.

அவன் வளர வளர தஞ்சை மாவட்டம் பொதுவுடைமைப் போர்க்களமாய் வளர்கிறது. நிலப்பிரபுத்துவத்தால் கெட்டிப்பட்ட சமூகம் கிளர்ச்சிகளால் உடைக்கப்படுகிறது. சீனிவாசராவ் தலைமையிலான விவசாயிகள் சங்கம் விஸ்வரூபமெடுக்கிறது. அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் விதைகளைப்போல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள்.

வடபாதிமங்கலங்களும் குன்னியூர்களும், மூலங்குடிகளும், ராவ் பகதூர்களும் மிரட்சியடையும் அளவுக்குப் புரட்சி வெடிக்கிறது.

உழைக்கும் மக்களிடம் வேர்வையாகவும் ரத்தமாகவும் வடிந்த அந்தப் புரட்சி, ஒருவனிடம் மட்டும் தமிழாக ஒழுகுகிறது.

பாரதிதாசன் சொல்லித்தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை-

“யாருமேல கீறினாலும்

ரத்தம் ஒண்ணுதானே

ஆகமொத்தம் பிறந்ததெல்லாம்

பத்தாம் மாதம்தானே”

– என்று எழுதிக் காட்டியவன்.

கம்யூனிசம் சொல்லிக்கொடுத்த வர்க்கப் போராட்டத்தை

“வசதி படைத்தவன்

தரமாட்டான்

வயிறு பசித்தவன்

விடமாட்டான்”

– என்று செந்தமிழ் செய்கிறான்.

அவன் கலைபெற்றது தமிழால்; நிலைபெற்றது கம்யூனிசத்தால்.

சேற்றிலே பிறந்தவனைச் செந்தாமரையாக்கிய கம்யூனிச சமூகமே உனக்கு என் சிவப்பு வணக்கம்.

சுயமரியாதை மேடைகளில் பாடல்கள் பாடி “நல்லதைச் சொன்னால் நாத்திகனா?” என்று தன் முதல்வரியை எழுதிய சிறுவனை ஒரு சித்தாந்தக் கவிஞனாக்கியது பொதுவுடைமை இயக்கம் என்பதை வரலாற்றில் யாரும் மறைக்கமுடியாது.

ஒரு விசித்திரமான சரித்திரம் இருக்கிறது பட்டுக்கோட்டையின் பேனா பொதுவுடைமை எழுதியது; ஆனால் திராவிடத்தையே அது வளர்த்தது.

ANNADURAI-Karunanithiகலைஞர் கருணாநிதியும், பேரறிஞர் அண்ணாவும்…

1950 களில் கலையுலகம் கட்டியெழுப்பிய பழைய பீடங்களை அசைத்ததிலும் சற்றே அகற்றியதிலும்  அறிஞர் அண்ணா, கலைஞர் (மு.கருணாநிதி) என்ற இரண்டு ஆளுமைகளுக்குப் பெரும் பங்கு உண்டு என்ற கருத்தை மாற்றாரும்  மறுக்க மாட்டார்கள்.

பகுத்தறிவு – சுயமரியாதை என்ற உள்ளடக்கங்கள் தமிழ்த் திரையைத் திசைமாற்றிப் போட்டன. ‘வேலைக்காரியும்’, ‘பராசக்தியும்’ திராவிட இயக்கத்தின் செல்லுலாயிட் சின்னங்களாயின. கலை இலக்கியத்தின் வழியே மக்கள் ஊடகத்தில் பயணித்தால்தான் ஓர் இயக்கம் கடைசி மனிதனை விரைந்து தொடமுடியும் என்பதை திராவிட இயக்கம் மெய்ப்பித்தது.

பொதுவுடைமை இயக்கம் கலையில் செய்துகாட்டத் தவறியதை மொழியில் செய்து காட்டியவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

MGR-Nadodi Mannan-பட்டுக்கோட்டையாரின் காலத்தால் அழியாத ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடல் ஒலித்த எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தில்…

அதே காலகட்டத்தில் திராவிட இயக்கத்தின் பிம்பமாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், இந்தப் பொதுவுடைமைக் கவிஞனின் பாடல்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்கவேயில்லை.

‘மக்கள் திலகம்’ என்ற முத்திரையைக் கட்டிக் காக்க மக்கள் கவிஞனின் வரிகள் அவருக்குத் தேவைப்பட்டன.

பௌத்தமதத்தின் பெருங்கூறுகளையெல்லாம் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு விரைந்து கிளைபரப்பிய இந்து மதத்தைப்போல, பொதுவுடைமைக் கவிஞனின் வரிகளையும் வாங்கிச் செழித்து  வளர்ந்தது திராவிடம்.

“தூங்காதே தம்பி தூங்காதே –

திருடாதே பாப்பா திருடாதே –

சின்னப் பயலே சின்னப் பயலே சேதிகேளடா –

குறுக்குவழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா –

பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போகமாறுது”

-போன்ற பாடல்கள் எம்.ஜி.ஆரின் சல்லிவேர்கள் பரவுவதற்கான பாதையைப் பதப்படுத்தின.

பட்டுக்கோட்டையின் உயிரெல்லாம் தமிழும், உள்ளமெல்லாம் கம்யூனிசமும் நிறைந்திருந்தன என்பதற்குச் சாகாத அவன் பாடல்களே சாட்சி.

களத்துமேட்டுப் பாடல்களில் மட்டுமல்ல – காதல் பாடல்களிலும் கூட அவனது பொதுவுடைமை ஆசை பூக்காமற் போனதில்லை.

தங்கப் பதுமையில் –

“முகத்தில் முகம் பார்க்கலாம் – விரல்

நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்”

– என்ற பாடலில் நுட்பத்திலும் நுட்பமான ஒரு கருப்பொருள் வைக்கிறான்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான சுகம் என்பது சுயசுகத்தோடு முடிந்து போவதல்ல. தாம்பத்யம் என்பது பெண்ணுடல் கொண்டு தன்னுடல் நிரப்புவதல்ல. அதுபோல் ஆணுடல்கொண்டு பெண்ணுடல் நிரப்புவதுமல்ல. ஆண் தன்னை உருக்கிப் பெண்ணை நிரப்புவதும் – பெண் ஒரு ஆணை நிரப்பத் தன்னைப் பெருக்குவதும் தாம்பத்யத்தின் இருபாற் தத்துவம். கொடுத்துப் பெறுதல் அல்லது பெற்றுக் கொடுத்தல். இழந்து கொண்டே அடைதல்; அல்லது அடைந்துகொண்டே இழத்தல் என்பதே தாம்பத்யத்தின் தத்துவம். எதிர் உயிரைப் பெருமை செய்வதுதான் இணைவிழைச்சின் இன்பம்.

பட்டுக்கோட்டை எழுதுகிறான்:

“இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும்

இருவர்க்கும் பொதுவாக்கலாம் – அன்பே அதன்

எண்ணிக்கை விரிவாக்கலாம்”

-நான் கேட்டுக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன வரிகளுள் இதுவும் ஒன்று.

தங்கத்தின் மூலக்கூறு பிரித்தால் கடைசிவரைக்கும் தங்கம்தான். பட்டுக்கோட்டையின் பாட்டுக்கூறு பிரித்தால் அவன் காதல்வரைக்கும் கம்யூனிஸ்ட்தான்.

Kalyanasundram-Pattukottaiபட்டுக்கோட்டை பாட்டெழுதிக் கொண்டிருந்த அதே கால அலைவரிசையில் இந்தியத் திரைப்பாட்டு வடக்கிலும் தெற்கிலும் எந்த மொழியில் இயங்கியது என்பது கருதத் தக்கது. அறுபதாண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தனித்தன்மை புலப்படும்.

“உடைந்துபோன

கனவுகள் சொல்கின்றன

என் கண்கள் கண்டெடுத்ததை

இதயம் தொலைத்ததென்று ”

இது 1950 இல் கறுப்புவெள்ளை யுகத்தில் ‘மதுமதி’யில் ஷைலேந்தர் இந்தியில் எழுதியது.

“எல்லோரும் சொல்கிறார்கள்

உன் இதயம் கல் என்று

நாடு சொல்கிறது

உன் மனது காடென்று

காட்டில் தேடிப் பார்த்தபோது தெரிந்தது

நீலக்குயிலின் கூடொன்று”

-இது 1952 இல் மலையாளத்தில் கவி பாஸ்கரன் நீலக் குயிலுக்கு எழுதியது.

பிறமொழியின் சமகால சகாக்களெல்லாம் படைப்புமொழி தொட்டுப் பாட்டெழுதினார்கள். நம் உள்ளூர்க்கவிஞனோ-

“ காவேரி ஓரத்திலே

கால்பதுங்கும் ஈரத்திலே

காலையில நான் நடப்பேன்

கலப்பை கொண்டுக்கிட்டு

கட்டழகி நீ வருவ

வெதையக் கொண்டுக்கிட்டு”

–  என்று உழைப்பு மொழி தொட்டுப் பாட்டெழுதினான்.

அதனால்தான் பட்டுக்கோட்டை பாடல்கள் என்ற சுவரொட்டி பார்த்துத் தமிழர்கள் கீற்றுக் கொட்டகையை மொய்த்திருக்கிறார்கள்.

அவன் பாடல்களில் பெரிய அலங்காரமில்லை. மேக மந்தைகள் நட்சத்திரங்களை மேயும் கற்பனைகளில்லை. தமிழ்மரபுக்குரிய கட்டமைவு அமைந்தது; கருத்தமைதி இருந்தது.

இருபெருங்கூறுகளில் பட்டுக்கோட்டை பெரிதும் கவனம் செலுத்தியதாய்க் கருதுகிறேன். ஒன்று –  முறியாத மோனை. இரண்டு – காதுக்குள் இனிக்கும் கடைஇயைபு.

“மனிதனாக வாழ்ந்திட வேணும்

மனதில் வையடா

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ

வலது கையடா

தனியுடைமைக் கொடுமைகள் தீரக்

தொண்டு செய்யடா

தானாய் எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா”

இதில் ‘மனிதனாக’ என்பதற்குத் தனியுடைமை என்று எதுகையுமிட்டு, முறியாத மோனைகளையும் அமைத்த பாவலன், “வையடா- கையடா- செய்யடா- பொய்யடா-” என்று கடைஇயைபுகளையும் கச்சிதப்படுத்தியிருப்பதுதான் கட்டமைதி. திரைப்பாட்டு எழுதுகிறவனுக்கு இது அவ்வளவு எளிதல்ல.

MGR-Arasilankumari-எம்ஜிஆர் பாடி நடித்த, பட்டுக்கோட்டையாரின் மற்றொரு புகழ்பெற்ற பாடலான “சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா” பாடல் ஒலித்த அரசிளங்குமரி படத்தில்….எம்ஜிஆர், பத்மினி…

ஒரு திரைப்பாடலாசிரியனுக்கு மூன்று எஜமானர்கள். இயக்குநர் – இசையமைப்பாளர் – தயாரிப்பாளர் என்று மூன்று சக்திகளைத் திருப்திப்படுத்தி, சில நேரங்களில் நான்காவது எஜமானராகிய நடிகரையும் தாண்டி வர வேண்டும். இந்தப் பாடலில் கூட “தனியுடைமைக் கொடுமைகள் தீரப் புரட்சி செய்யடா” என்றுதான் பட்டுக்கோட்டை எழுதியிருந்தாராம். ‘புரட்சி’ என்ற வார்த்தை பலருக்கு மிரட்சியைக் கொடுத்திருக்கிறது. அந்த ஒரு சொல்லை மட்டும் மாற்றுங்கள் என்று வற்புறுத்தப்பட்டிருக்கிறார். பிறகுதான் ‘புரட்சி’ என்ற அசைவச் சொல்  அகற்றப்பட்டு ‘தொண்டு’  என்ற சைவச்சொல் பெய்யப்பட்டிருக்கிறது. நான்கு எஜமானர்களைக் கடந்தாக வேண்டிய பாடலாசிரியன் தணிக்கைக்குழு என்ற சர்வாதிகாரியையும் தாண்டி வரவேண்டியவனாயிருக்கிறான்.

‘சிவப்பு மல்லி’யில் “எரிமலை எப்படிப் பொறுக்கும்” என்ற பாட்டில் ‘ரத்தச் சாட்டை எடுத்தால் உனது யுத்தக் கனவு பலிக்கும்’ என்று எழுதியிருந்தேன். வன்முறை தெறிக்கிறது என்று தணிக்கைக் குழு தடுத்தது. “சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் கையை நெரிக்கும் விலங்கு தெறிக்கும்” என்று மாற்றிக் கொடுத்தேன். வன்முறை குறைந்துவிட்டது என்று தணிக்கைக் குழு தணிந்தது. பழைய வரியைவிட வீரியம் கூடி விட்டது என்று தயாரிப்புத் தரப்பு மகிழ்ந்தது.

மார்க்சியப் படைப்பாளிகளில் சிலர் மரபு வழி வந்த தமிழ் அழகியலைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள்.  காற்றில் கூட ஈரப்பதம் இருக்கிறது. சிலர் கவிதைகளில் இல்லாமல் போகிறது. ரத்த ஓட்டம் சுண்டிப் போன சொற்களால் அவர்கள் வாழ்க்கையை வரையப் பார்க்கிறார்கள். உண்மையான மார்க்சியம் என்பது வறண்ட வாழ்க்கையில் ஈரம் சேர்ப்பது. ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கான பேதமற்ற பேரின்பமே மார்க்சிய அழகியல். மரபுகளை உள் வாங்கிய தமிழ் அழகியல் பட்டுக்கோட்டையின் பாடல்களில் படிந்துகிடப்பது பாவேந்தர் தந்த பயிற்சியால் கூட இருக்கலாம்.

“என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே – நீ

இளையவளா மூத்தவளா?”

– என்று பட்டுக்கோட்டை கேட்கும் கேள்வியில் மதியைத் தனது மைத்துனியாக்கி விடும் சாமர்த்தியம் தொனிக்கிறது.

விஞ்ஞானம் பிரகடனப்படுத்திவிட்டது நிலா ஒரு பாலைவனம் என்று. அங்கே பிராணவாயு இல்லையென்று கோள் ஈர்ப்பும் குறைவென்று. மற்றும் தண்ணீர் இருந்ததற்கான தடயமும் இல்லையென்று . விண்வெளிப் புழுதிகளின் குப்பைக்கூடை அதுவென்று. அதிலுள்ள மடுக்களும் மடிப்புகளுமே கறையாகத் தோற்றம் தரும் காட்சி என்று. ஆனால் இவற்றையெல்லாம் புறம் ஒதுக்கி பூமியில் ஒழுகும் நிலாப் பாலையே கவிபாடிக் களிக்கிறது கலை.

விஞ்ஞானத்திற்கும் கலைக்கும் உள்ள வேறுபாடு அதுதான். ஒன்றை ஒன்றாகப் பார்ப்பது விஞ்ஞானம். ஒன்றை மற்றொன்றாகப் பார்ப்பது கலை. நிலாக்கோளில் கறைபோல் காட்சிப்படும் தோற்றத்தை-

“கன்னத்தில் காயமென்ன

வெண்ணிலாவே – உன்

காதலன்தான் கிள்ளியதோ

வெண்ணிலாவே”

– என்று பாடும் பட்டுக்கோட்டை தற்குறிப்பேற்ற அணியால் ஈராயிரம் ஆண்டின் தமிழ் அழகியல் மரபைத் தொடரும் கவிஞனாகவே தோன்றுகிறான்.

பாடலில் ஆங்கிலச் சொற்களைக் கலந்திருக்கிறார். பெண்களை ஒரு பாடலில் வஞ்சகிகள் என்று வர்ணித்திருக்கிறார். ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்கமுடியாது’ என்று மார்க்சியத்திற்கு எதிர்வரிசையில் நின்று பேசியிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனக் கணைகள் பட்டுக்கோட்டை மீது வீசப்படுவது உண்டு. அந்தச் சில்லறை விமர்சனங்களை நாம் சிரச்சேதம் செய்துவிடலாம். உலகத்தின் எந்தப் படைப்பாளியின் படைப்புகளிலும் கொஞ்சம் கலைக்கழிவு உண்டு. அதைவைத்து அம்பு தொடுப்பது விமர்சனங்களின் பொய்விடைப்பு என்றே கருதப்படும்.

Kannadasan“பாடுவது கவியா? இல்லை பாரிவள்ளல் மகனா?” என்று கண்ணதாசன் பாடியபோது பாரிவள்ளலுக்கு மகனில்லை என்பது கூடக் கண்ணதாசனுக்குத் தெரியவில்லையே என்று ஒரு கூட்டம் முணுமுணுத்தது. கவிதையை நுகரும் நாசி இவர்களுக்குக் கடுகளவும் இல்லையே என்றுதான் கலையறிந்த கூட்டம் கவலைப்பட்டது.

ஒரு பாடல் அல்லது ஒரு படைப்பின் வீரியம் கவிஞன் இறந்த பிறகும் அது எத்தனை காலம் இறவாமல் இறக்கிறது என்பதுதான். பட்டுக்கோட்டையின் பல பாடல்களுக்கு மரணமில்லை. அவை நிகழ்காலத்தின் நீரோட்டத்தில் வாழ்கின்றன.

“பொதுப்பணியில் செலவழிக்க

நினைக்கும்போது பொருளில்லே

பொருளும் புகழும் சேர்ந்தபின்னே

பொதுப் பணியில் நினைவில்லே

போதுமான பொருளும் வந்து

பொதுப்பணியில் நினைவும் வந்தால்

போட்ட திட்டம் நிறைவேறக்

கூட்டாளிகள் சரியில்லே”

1959 இல் எழுதப்பட்ட இந்தப்பாட்டு ஐம்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகும் நிகழ்காலங்களின் அரசியலுக்கு நெருக்கமாக இருப்பது தற்செயலானதல்ல.

இருபத்தொன்பது வயதில் இறந்துபோனவனின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. அவன் எழுதிய கடைசிப் பாடலுக்குரிய பணத்தைக் கையோடு கொண்டுவருகிறார் நடிகை பண்டரிபாய். பணத்தை வைத்துவிட்டு அழுதவர் அவன் எழுதிய கடைசிப் பாடலைப் படித்துப் பார்க்கிறார்.

“தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கிவிடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் – இதப்

புரிஞ்சுக்கிட்டவன் அழமாட்டான்”

புரிந்த பிறகும் அழுகை வருகிறது.

தான் வாழவிருந்த ஆயுளையும் தன் பாட்டுக்கு ஊட்டிவிட்டுப் போய்விட்டான் பட்டுக்கோட்டை. தமிழ்ச் சமூகம் அவனை நாளும் நன்றியோடு நினைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் தன் பாரம்பரியத்தின் பிரதியானால்தான்  கலை இலக்கியத்தின் தொடர்ச்சியைக் காப்பாற்ற முடியும்.

2030 இல் அவனது நூற்றாண்டு வருகிறது. அந்த விழாவை நாடு தழுவியெடுப்பேன் நானிருந்தால். இல்லையேல் தமிழ்ச் சமூகத்தை முன்னிலைப்படுத்தி என் பிள்ளைகள் எடுப்பார்கள். இந்தக் கட்டுரையை அதற்கான உயில் என்றும் எழுதுகிறேன்.

-கவிப்பேரரசு வைரமுத்து

(செல்லியல் தொகுப்பு)