கோலாலம்பூர், நவம்பர் 10 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரிக்க பு.சாரோன் என்ற பேராசிரியர் எடுத்த முயற்சிகளுக்கு துணை நின்றவர் பர்வீன் சுல்தானா.
அழகு மிளிரும் அற்புத நடையிலான மேடைத் தமிழுக்குச் சொந்தக்காரர். தொலைக்காட்சி பட்டிமன்றங்களின் வழி ஏற்கனவே பிரபலமானவர். மலேசியாவிலும் பல முறை பட்டி மன்றங்களில் கலந்து கொண்டிருக்கின்றார். இலக்கியச் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கின்றார்.
கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் வெளியிடப்பட்ட பட்டுக்கோட்டையாரின் ஆவணப்படத்தில் தனது பங்களிப்பு குறித்து அந்த விழா மேடையில் உரையாற்றினார் சுல்தானா.
மலேசியாவுக்கு அவர் வருகை தந்திருந்தபோது அவரை நேரடியாக சந்தித்து ‘செல்லியல்’ நடத்திய நேர்காணலில் பட்டுக்கோட்டையாரைப் பற்றியும் சாரோனின் ஆவணப் படத்தில் தான் பங்கு கொண்டது பற்றியும் பல சுவையான விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பர்வீன் சுல்தானா.
சுயமரியாதை இயக்கங்களோடும், பெண்ணினப் போராட்டங்களோடும் வெகுவாகத் தொடர்பு கொண்டவர் சுல்தானா. “பட்டுக்கோட்டையாரின் ஆவணப் படத்தை முழுமைப்படுத்தும் பணிகள் தாமதமாகிய போதும், சிக்கல்கள் ஏற்பட்ட போதும், நான் ரௌத்ரம் கொண்டேன். சுயமரியாதைச் சிந்தனையை முன்னெடுத்த படைப்பாளிக்கான ஆவணப் படத்தை வெளிக்கொணருவதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்” என்கிறார்.
மக்கள் கவிஞராக வாழ்ந்த பட்டுக்கோட்டையார் தானே எழுதிய பாட்டுக்கள்தான் இசையமைப்பாளர்களால் மெட்டுக்கள் போடப்பட்டு தமிழ்த் திரையுலகில் உலா வந்தன என்று கூறும் சுல்தானா, வெறும் நடிகராக இருந்த எம்ஜிஆர் மக்கள் தலைவராக அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு உந்தித் தள்ளியவை சுயமரியாதைச் சிந்தனைகளும், தத்துவங்களும் இணைந்த பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்தான் என்பது சரித்திரபூர்வமான உண்மை என்கிறார்.
பட்டுக்கோட்டையாரைப் பற்றிய தகவல்களில் தன்னைக் கவர்ந்தது, அவர் தனது பாடல்களில் பிரதிபலித்தது போலவே, சொந்த வாழ்க்கையிலும் சுயமரியாதைச் சிந்தனையோடு வாழ்ந்திருக்கின்றார் என்பதுதான்.
எந்த இடத்திலும், எத்தகைய ஏழ்மையிலும் தனது கவிதா கர்வத்தை விட்டுக்கொடுக்காமல், சுயமரியாதைச் சிந்தனையை சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கின்றார் பட்டுக்கோட்டையார். அவரது பல வாழ்க்கைச் சம்பவங்களின் மூலம் அது தெரிய வருகின்றது எனப் பெருமிதம் கொள்கின்றார் சுல்தானா.
பட்டுக்கோட்டையாரைப் பற்றியும், அவரது ஆவணப் படம் தயாரிப்பில் ஏற்பட்ட சுவாரசியமான தகவல்கள் குறித்தும் பர்வீன் சுல்தானா நம்மோடு பகிர்ந்து கொண்ட விவரங்களை கீழ்க்காணும் காணொளியில் நீங்கள் காணலாம்:
-இரா.முத்தரசன்
-புகைப்படங்கள்; காணொளி வடிவம்: பீனிக்ஸ்தாசன்