கலிபோர்னியா, அக்டோபர் 8 – அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘எச்பி’ (HP), இரு தனித்தனி நிறுவனங்களாக பிரிய இருக்கின்றது.
அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ‘ஹெவ்லெட்- பேக்கார்ட்’ (Hewlett-Packard), தற்போது கணினி மற்றும் ‘அச்சுப்பொறி’ (Printer) தயாரிப்பு பிரிவை தனி நிறுவனமாகவும், நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கும் பிரிவை மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்க இருக்கின்றது.
இரு பிரிவுகளையும் தனித்தனி நிறுவனங்களாக பிரிப்பதன் மூலம் அதனை இலாப நோக்கத்தில் இயங்க வைக்க முடியும் என்பதே எச்பி நிறுவனத்தின் குறிக்கோள் என அந்நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
எனினும், எச்பி-ன் இந்த பிரிவு குறித்து அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் இதுவரை எந்தவொரு கருத்தினையும் பதிவு செய்யவில்லை.
2015-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த பிரிவு சாத்தியமாகும் என்று கூறியுள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மெக் வைட்மேன், எச்பி நிறுவனத்தின் எதிர்காலத் திட்டம் மற்றும் இதன் பயன்கள் குறித்து கூறுகையில், “இரு தனித்தனியான நிறுவனங்களாக எச்பி செயல்படுவதன் மூலம், தொடர்ந்து மாறி வரும் சந்தைகளுக்கேற்ப நமது வர்த்தகத்தையும் எளிதாக்கிக் கொள்ளமுடியும்” என்று அவர் கூறியுள்ளார்.
சுமார் 300,000 தொழிலாளர்கள் பணி செய்யும் இந்த நிறுவனத்தில், ஏற்பட இருக்கும் புதிய மாற்றம் காரணமாக முன்பு கணிக்கப்பட்டதை விட கூடுதலாக 5,000 ஊழியர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கூறப்படுகின்றது.
இந்த புதிய மாற்றம் பற்றி பொது நோக்கர்கள் கூறுகையில், “எச்பி-ன் இந்த முடிவு அந்நிறுவனத்திற்கு எத்தகைய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்று தெரியவில்லை. எனினும், நிறுவனத்தின் பிரிவு, புதிய நிறுவனங்களுக்கான மறுசீரமைப்பு, நிதிநிலை போன்ற முக்கிய அம்சங்கள் அனைத்திலும் பாதிப்பு ஏற்படும் என்பது மட்டும் நிதர்சனம்” என்று கூறியுள்ளனர்.