ஜோர்ஜ் டவுன், அக். 9 – பினாங்கின் பத்து ஃபெரிங்கியில் உள்ள மியாமி கடற்கரை உணவக வளாகத்தை திங்கட்கிழமை ராட்சத அலைகள் தாக்கின. இதில் அங்குள்ள சில உணவகங்களில் மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் கடும் சேதமடைந்தன.
இதையடுத்து ராட்சத அலைகளின் சீற்றம் காரணமாக தங்களது வர்த்கம் பாதிக்கப்படக்கூடும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அக்குறிப்பிட்ட கட்டடத்தில் மொத்தம் 10 உணவகங்கள் இயங்கி வருகின்றன. சம்பவத்தன்று ஒரே ஒரு கடை மட்டுமே திறக்கப்பட்டிருந்தது.
வழக்கமான சூழ்நிலையில் அமைதியுடன் காணப்படும் பத்து ஃபெர்ரிங்கி கடற்கரையின் தோற்றம் – கோப்பு படம்
“வானிலை மோசமாக இருந்த காரணத்தால் ராட்சத அலைகள் தாக்கியபோது கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இல்லை. வியாபாரம் மந்தமாக இருந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் அமரும் பகுதியில் பலத்த சத்தம் கேட்டது. ராட்சத அலை ஒன்று அப்பகுதியில் விழுந்ததைக் கவனித்தேன். இனி அலைகளுக்கு பயந்து வாடிக்கையாளர்கள் வருவது குறையக்கூடும். இதனால் என் வியாபாரம் பாதிக்கப்படும் என அஞ்சுகிறேன்,” என மியாமி வளாகத்தில் உணவகம் நடத்தி வரும் அசார் அப்துல் அசீஸ் கூறியதாக ஸ்டார் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருவதாக பினாங்கு மாநகர் மன்றத்தின் கட்டடப் பிரிவு இயக்குநர் யூ துங் சியாங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்தின் புக்கெட் தீவுப் பகுதியில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாகவே மலேசியாவின் வடமாநிலங்களில் ராட்சத அலைகள் எழுவதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.